வீரப்பன் சன் டிவி பேட்டியால் தொடங்கிய சர்ச்சை... 30 ஆண்டுகள் கழித்து நடிகை சுகன்யா வெற்றி!

சென்னை: நடிகை சுகன்யா தொடர்பான அவதூறு வழக்கில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்து நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டு, சன் டிவியின் ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில், சந்தனக் கடத்தல் வீரப்பன் அளித்த பேட்டியில் நடிகை சுகன்யாவை பற்றிய தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒளிபரப்பப்பட்டன. அப்போது, முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவின் மகனுடன் சுகன்யாவுக்கு தொடர்பு இருப்பதாக வீரப்பன் கூறியிருந்தார். இந்த பேட்டி பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.


இதையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி நடிகை சுகன்யா, சன் டிவி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு மற்றும் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2015 ஆம் ஆண்டு சுகன்யாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, ரூ.10 லட்சத்து 500 நஷ்டஈடு வழங்குமாறு சன் டிவிக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சன் டிவி மேல்முறையீடு செய்தது.


இந்த நிலையில், 1995-ல் தொடங்கப்பட்ட வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்ட சமீபத்திய தீர்ப்பிலும், நீதிமன்றம் மீண்டும் சுகன்யாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஒரு செய்தி அல்லது குற்றச்சாட்டை ஒளிபரப்புவதற்கு முன்பு அதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு என்றும், சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நீதிமன்றம் சன் டிவிக்கு கடும் கண்டனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இந்த தீர்ப்பு, ஊடகங்களின் பொறுப்புணர்வு மற்றும் செய்தி வெளியீட்டின் நெறிமுறைகள் குறித்து முக்கியமான முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel