Sunday, April 11
Shadow

தேமுதிக தனித்துப் போட்டி?. பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாகம்!

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவிற்கு 21 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தேமுதிகவிற்கு10 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதனை ஏற்க மறுத்த தேமுதிக பாமகவிற்கு ஒதுக்கிய அளவிற்கு தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று கோரி வந்தது.

அதிமுக கூட்டணி

இந்நிலையில் 10 தொகுதிகளுக்கு மேல் தர வாய்ப்பே இல்லை என்று அதிமுக கைவிரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ், ‘நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ என்பதைக் குறிக்கும் வகையிலான புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.

இதையடுத்து எதிர்பார்த்த எண்ணிக்கையில் சீட் கிடைக்காததால் எதிர்வரும் சட்டசபை தேர்தலில், தேமுதிக தனித்துப் போட்டி உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து, எடப்பாடி பேருந்து நிலையம் முன்பு நகரச் செயலாளர் ஜிவானந்தம் தலைமையில், நேற்று இரவு திரண்ட தேமுதிகவினர், கட்சி தலைமையின் முடிவை வரவேற்று, பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள்.