Saturday, January 16
Shadow

திமுகவுக்காக களமிறங்கும் சத்யராஜ்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் திருவிழா இப்போதே களைகட்டத் தொடங்கி இருக்கும் சூழலில் பிரச்சாரக் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுகவும் வேல் யாத்திரை என்ற பெயரில் பாஜகவும் சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் கமலஹாசனும் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டார்கள்.

இந்நிலையில் திமுகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர் கரு பழனியப்பன் ஆகியோர் களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் சத்யராஜ் எலியும் பூனையுமாக ஒருவரை ஒருவர் எதிர்க்கும் வகையில் என்னம்மா கண்ணு சௌக்கியமா சொல்லும்மா கண்ணு சௌக்கியம்தான் என்ற பாடல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

அந்தப் பாடல் நிஜமானால் எப்படி இருக்குமோ அப்படித்தான் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிக்கு எதிராக சத்யராஜ் கருத்துசொல்லி வருகிறார். எந்த திட்டமிடலும் இல்லாமல் கொண்டுவருவதுதான் அரசியல் என்றும் திட்டமிட்டு வருவதற்கு பெயர் பிசினஸ் என்றும் கடந்த வாரம் தான் ரஜினியை தாக்கி பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சத்யராஜ் பேசியிருந்தார்.

இயல்பாகவே பெரியார் கொள்கையை கடைபிடித்து வரும் சத்யராஜ் இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பரப்புரை செய்வது குறித்து சிந்தித்து வருகிறார், திமுகவும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் இயக்குநர் கரு பழனியப்பன் திமுக ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது இவரது குடும்பமும் திராவிட இயக்க பாரம்பரியம் கொண்டது. அதோடு திமுக இளைஞரணி நடத்தும் போட்டி நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்

அதிமுகவில் ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளதால் அதற்கு சற்றும் சளைக்காத வகையில் திமுகவிலும் நட்சத்திரங்களை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதேபோல் திமுக முன்னாள் அமைச்சரின் பெயர் எனும் நடிகருமான நந்தாவும் திமுகவுக்காக தேர்தல் பரப்புரை மேற்கொள்வார் என தெரிகிறது.

சத்யராஜ்

சத்யராஜ்

Source : Twitter