Friday, June 18
Shadow

திருநெல்வேலி பாஜக வேட்பாளர் குஷ்புவா?

திருநெல்வேலி பாஜக வேட்பாளர் : டெல்லி மேலிடம் இதுவரை ஓப்புதல் வழங்காத காரணத்தால் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிட தாமதமாவதாக சொல்லப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் குதித்து விட்டன. ஆனால் பாஜக இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் இருப்பது பெருத்த சந்தேகத்திற்கு வழிவகுத்துள்ளது.

திருநெல்வேலி பாஜக வேட்பாளர்

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக வரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி  தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் 70 தொகுதிகளில் தொடங்கி இறுதியாக 20 தொகுதிகளை பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு முடிவடைந்து பல நாட்கள் ஆகியும் இதுவரை பாஜக வேட்பாளர் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் உள்ளது.

இதற்கிடையே பாமகவுக்கு கொடுக்கப்பட்டுள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை பாமக கேட்டு பெறவில்லை எனவும் 23 தொகுதிகள் என கணக்கு காண்பிக்கும் பொருட்டே அந்த தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. புதிதாக கட்சியில் இணைந்த குஷ்பூவுக்கு இந்த முறை சீட் கொடுக்க கூடாது என பாஜக கட்சியினரின் வற்புறுத்தல் காரணமாகவே சேப்பாக்கம் தொகுதியை பாஜக அதிமுகவிடம் கேட்கவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கினறன.

குஷ்பூ போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சேப்பாக்கம் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டதால் குஷ்பூவின் கனவு நிர்மூலமானது. இருந்தும் முயற்சியைக் கைவிடாத குஷ்பூவிற்கு, திருநெல்வேலி தொகுதியை கொடுக்க பாஜக தலைவர்களில் சிலர் கூறி வருவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் நேற்று கட்சி தலைமை அனுமதி வழங்கும் ‘பி பார்ம்’ இல்லாமலேயே திருநெல்வேலி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஒருவேளை நயினார் நாகேந்திரனுக்கு திருநெல்வேலி தொகுதியை கொடுக்காமல்,  குஷ்பூவை அத்தொகுதியில் நிறுத்தினால், சுயேட்சையாக போட்டியிடவும் நயினார் நாகேந்திரன் தயார் என்பதை பறைசாற்றவே  இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை போட்டியிட விரும்பிய கிணத்து கடவு தொகுதியும் பாஜகவுக்கு கொடுக்கப்படவில்லை.

இதுபோன்ற குளறுபடிகள் ஏகபோகமாக இருக்கும் நிலையில் பாஜக தயார் செய்த வேட்பாளர் பட்டியலை, டெல்லிக்கு அனுப்பி மூன்று நாட்களாகியும் அங்கு இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே வேட்பாளர் பட்டியலை பாஜக இதுவரை  வெளியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.