ரஜினி 173-வது படத்தின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தின் இயக்குநர் மற்றும் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் - 2 திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தன் 173-வது படத்தில் நடிக்கிறார்.நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை முதலில் கே.எஸ். ரவிக்குமார், அவரைத் தொடர்ந்து சுந்தர். சி இயக்குவதாக இருந்த நிலையில், அவர் திடீரென விலகினார். அவரைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இந்தப் படத்தை இயக்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி, அவரும் விலகினார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் - அஷ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.பேட்ட, தர்பார், ஜெய்லர், வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த், சென்னையில் பிரபலமாக இருந்த 5 ரூபாய் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அறுவைச் சிகிச்சை மையத்தில் சண்டைக் காட்சியில் இருப்பது போன்றும், மருத்துவர் உடையில் இருக்கும் ரஜினி தனது கையில் ரத்தக்கரையுடன் கத்தி வைத்திருப்பது போன்ற முதல்பார்வை போஸ்டரையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புதுமையான கதைகளில் அதிக கவனம் செலுத்தும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதனைத்தொடர்ந்து வளர்ந்து வரும் நட்சத்திரம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியையும் நல்ல வசூலையும் ஈட்டியது.இளம் இயக்குநர் அஷ்வத்தின் இயக்கத்தில் ரஜினி மற்றும் அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால், இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel