ஆகஸ்ட் 12-ல் முழு சூரிய கிரகணத்தை நேரலையில் ஒளிபரப்பும் நாசா!
வரும் ஆகஸ்ட் 12த் தேதி அன்று வட அரைக்கோளத்தின் பல பகுதிகளில் அரிதான மற்றும் கண்கவர் 'முழு சூரிய கிரகணம்' நிகழவுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வை உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்க்கும் வகையில் 'நாசா' தனது அதிகாரப்பூர்வ தளம் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களில் நேரலை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு கடந்து செல்லும் போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழுவதால் இந்த முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யாவின் வட பகுதி, அட்லாண்டிக் பெருங்கடல், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் சூரியன் முழுமையாக நிலவால் மறைக்கப்பட்டு 'முழு சூரிய கிரகணம்' தென்படும்.
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், கனடா, ஐரோப்பாவின் பெரும்பகுதி மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இது பகுதி கிரகணமாக தெரியும்.
ஐஸ்லாந்தின் மேற்கு பகுதியில் கிரகணத்தின் உச்சக்கட்டத்தில் சூரியன் முழுமையாக மறைக்கப்படும் நிகழ்வு '2 நிமிடங்கள் 18 வினாடிகள்' வரை நீடிக்கும். ஐஸ்லாந்தில் மாலை வேளையிலும், ஸ்பெயினில் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்பாகவும் முழு கிரகணம் தென்படும்.
பகுதி கிரகணம் தொடங்குவது முதல் முடிவது வரை இந்த முழு நிகழ்வும் சுமார் '4 மணி நேரமும் 23 நிமிடங்களும்' நீடிக்கும். இந்த கிரகணம் நிகழும் அதே இரவில் ஆண்டின் புகழ்பெற்ற 'பெர்சீட்ஸ் விண்கல் மழை' மற்றும் 'அமாவாசை' இரவும் இணைவது இதன் மற்றொரு சிறப்பு அம்சம்.
இந்த கிரகணத்தின் போது சூரியனின் வளிமண்டல மேலடுக்கான 'கொரோனா' பகுதியை விரிவாக ஆய்வு செய்ய அறிவியல் குழுக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
நாசாவின் அதிவேக ஆராய்ச்சி ஜெட் விமானங்கள் நிலவின் நிழலைத் தொடர்ந்து பறந்து, மேகங்கள் இல்லாத வளிமண்டலத்தின் மேல் பகுதியில் இருந்து சூரியன் கொரோனாவைத் தெளிவான புகைப்படங்கள் மற்றும் தரவுகள் மூலம் ஆய்வு செய்யும்.
அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயினில் அறிவியல் பலூன்கள் விண்ணில் செலுத்தப்பட்டு, கிரகணத்தின் போது பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் அளவிடப்படும்.
ஐரோப்பா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிந்து வருகின்றனர். சூரிய கிரகணத்தைப் வெறும் கண்களாலோ அல்லது சாதாரண கூலிங் கிளாஸ் மூலமாகவோ பார்க்கக்கூடாது. 'ISO 12312-2 'சான்றிதழ் பெற்ற சூரிய கிரகணக் கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நாசா எச்சரித்துள்ளது.
இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு இந்த நிகழ்வு நடைபெறுவதால், இந்தியாவில் இதனை நேரில் பார்க்க முடியாது. இருப்பினும், நாசாவின் நேரலை ஒளிபரப்பு மூலம் விண்வெளி ஆர்வலர்கள் இதனை தங்களது மொபைல் மற்றும் கணினிகளில் நேரடியாகக் கண்டு ரசிக்கலாம்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel