மத்திய அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் - 'ஜென் Z'களை கவர பிரதமர் மோடி பிளான்
தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய போராட்டம், தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வழிவகுத்தது.
இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி, இன்ஸ்டாகிராமில் மாணவர்களை கவரும் வேலையில் இறங்கியுள்ளார். கட்சியினரையும் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றியை தீர்மானிப்பதில் ஜென் இசட் முக்கிய காரணியாக மாறும் சூழலில், அவர்களை கவர பல்வேறு விஷயங்களை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. பாஜகவின் சிந்தாந்த தலைமையாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஜென் இசட் சந்திப்புகளை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுடன் நேரடியாக உரையாடுவதற்காக மோடி அரசு ஒரு புதிய தேசிய அளவிலான பிரச்சாரத்தைத் திட்டமிட்டுள்ளது.
'ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்' என்ற இந்த திட்டத்தின்படி, மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று மாணவர்களுடன் உரையாடுவார்கள்.
இளைஞர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதோடு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் நலன் தொடர்பான மத்திய அரசின் திட்டங்களை விளக்குவதே அவர்களின் பணி.
அமைச்சர்கள் மாணவர்களுடன் உரையாடுவதோடு, மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைப்பார்கள்.
இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகள் தொடர்பான கவலைகளை நேரடியாகக் கேட்டறிவதற்கான ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
ஜென் இசட் தலைமுறையினருடன் நேரடித் தொடர்பை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.
மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மாணவர்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்ப்பதும் இதன் ஒரு பகுதியாகும். இவற்றில் எது முக்கிய நோக்கம் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.