அறத்தைப் போற்றி தீமைகளை முறியடிப்போம்..!- கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இபிஎஸ் வாழ்த்து
கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது.
இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
'நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்; எனக்கு பகைவனுமில்லை, நண்பனுமில்லை. என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்' என்று உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும், எனது இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தீமைகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும்.
'அறம் பிறழ்கின்றபோது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்' என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, அறத்தை வளர்ப்பதே நமது கடமை என்ற உயரிய குறிக்கோளுடன் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel