தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

“நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” - அமைச்சர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஆ. ராசா!

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இக்கூட்டத்தொடரின்போது காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசினார்.

அப்போது திமுகவை கடுமையாடி சாடிய அவர், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் செய்கை ஒன்றையும் செய்தார்.

இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இடதுசாரிகள் உள்ளிட்ட தவெகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் விஜய்யின் இந்த செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து தன்னுடைய உடல்மொழி எதேச்சையானது என்றும், யாரையும் புண்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டது இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்திருந்தார்.

இதனிடையே மு.க.ஸ்டாலின் ஒன்றும் மிசாவில் கைது செய்யப்படவில்லை, அவர் இந்திரா காந்தியை தவறாக பேசியதால் பெண்வழக்கில் கைது செய்யப்பட்டார், இதற்கு ஒன்றும் திமுக ஆர்ப்பாட்டம் செய்யத் தேவையில்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் சட்டமன்றத்தில் பேசியிருந்தார்.

அமைச்சர் நிர்மல்குமார் வரலாற்றை திரித்துப் பேசுவதாகவும், ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது உண்மை எனவும் அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் மீண்டும் மீண்டும் அமைச்சர் நிர்மல்குமார் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தே பேசிவந்தார்.

தவெகவின் இந்தப் பேச்சினை கண்டித்து நேற்று (செப்.12) திமுக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது. அந்த வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசியிருந்தார்.

இக்கூட்டத்தில் பேசியிருந்த எம்.பி. ஆ.ராசா, அமைச்சர் நிர்மல் குமாரை காட்டமான மொழியில் விமர்சித்திருந்தார். ஆ.ராசாவின் பேச்சு சர்ச்சையாக தவெக கூட்டணித் தலைவர்கள் மட்டுமின்றி திமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ராசா. வருத்தம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

“தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’, உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்;

என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel