தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

வாட்ஸ்-அப் மூலம் தடை செய்யப்பட்ட கேரள ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை – 3 பெண்கள் உள்பட 6 பேர் அதிரடி கைது!

கோவை மாவட்டம் ஆனைமலை பாரதி நகரைச் சேர்ந்த கவுதம் (34) என்பவர், கேரள மாநில எல்லையான மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு கடை நடத்தி வருகிறார்.

இவர் தமிழக எல்லையான ஆனைமலை பகுதியில் உள்ள தனது வீட்டில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளைப் பதுக்கி வைத்து, வாட்ஸ்-அப் செயலி மூலம் தமிழக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

ஆனைமலை போலீசார் தலைமையில், போலீசார் அடங்கிய தனிப்படையினர் கவுதமின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 5,900 கேரள மாநில லாட்டரி சீட்டுகளை போலீசார் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் என்று கண்டறியப்பட்டது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

கைது செய்யப்பட்ட கவுதம் மற்றும் அவரது உறவினர்களான ஜெயசவுந்தராயன் (32), ஜீவானந்தம் (26) ஆகியோர் இணைந்து, கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 'ஓணம் பம்பர்' லாட்டரி சீட்டுகளின் புகைப்படங்களை வாடிக்கையாளர்களின் வாட்ஸ்-அப் எண்களுக்கு அனுப்பி வந்துள்ளனர்.

பரிசு விழுந்தால் பெரும் தொகை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, ஆன்லைன் மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்தச் சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்தச் சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த கவுதம், ஜெயசவுந்தராயன், ஜீவானந்தம் மற்றும் இவர்களுக்குத் துணையாக இருந்த 3 பெண்கள் என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பதற்கான பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக-கேரள எல்லைப் பகுதியில் வாட்ஸ்-அப் மூலம் பம்பர் லாட்டரி விற்ற கும்பல் சிக்கிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel