சிறப்புச் செய்தி

பஞ்சாப்: சட்டவிரோத போதை மருந்து விற்பனையை தட்டிக்கேட்ட தன்னார்வலர் சுட்டுக்கொலை!

11 hours ago 13 பார்வைகள்
பஞ்சாப்: சட்டவிரோத போதை மருந்து விற்பனையை தட்டிக்கேட்ட தன்னார்வலர் சுட்டுக்கொலை!

பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில், சட்டவிரோத மருந்து விற்பனையை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஆர்வலர் பர்மிந்தர் சிங் ஜோட்டா, அப்பகுதியில் உள்ள மருந்துக் கடை ஒன்றில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை அறிந்து அங்கு சென்று உரிமையாளரிடம் இதுதொடர்பாக கேட்டுள்ளார்.

மேலும் அந்த சம்பவத்தை வீடியோ பதிவும் செய்துள்ளார். அப்போது அந்த கடை உரிமையாளர் துப்பாக்கியை எடுப்பதையும் வீடியோவில் கூறியுள்ளார். தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே கடைக்காரர் ஜோட்டாவை சுட்டுள்ளார். உடனடியாக ஜோட்டா உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜோட்டாவின் தந்தை, பகவந்த் மான் தலைமையிலான அரசு தனது மகனைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும், தற்போது தனது பேரக்குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தன் மகனின் போதைப்பொருள் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடரப்போவதாக ஜோட்டாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

“போதைப்பொருளுக்கு எதிரான இந்தப் போரை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம். நான் உயிருடன் இருக்கும் வரை, இதற்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன்.

நான் இறப்பதற்கு அஞ்சவில்லை; குண்டடி வாங்கவும் தயாராக இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

கொலைக்குக் காரணமான கடை உரிமையாளர் அஸ்வினி குமார் கடையைப் பூட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். தலைமறைவாக உள்ள அவரைக் கைது செய்ய பஞ்சாப் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதன் நேரடி விளைவே இந்தக் கொலை என முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் ராஜா தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் “அரசியல்வாதி-காவல்துறை-போதைப்பொருள் மாஃபியா கூட்டணி” சுதந்திரமாகச் செயல்படுவதாகக் கட்சித் தலைவர் சுக்பால் சிங் கைரா குற்றம் சாட்டினார்.

ஜோட்டாவின் எச்சரிக்கைகளை மாநில அதிகாரிகள் மீண்டும் மீண்டும் புறக்கணித்ததாகவும், இது அரசின் குற்றவியல் அலட்சியம் என அகாலி தல் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் எந்தவொரு தனிநபரும் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள், மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பல்டேஜ் பன்னு தெரிவித்துள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்