சிறப்புச் செய்தி

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் ஹோம் டிஸ்ப்ளே அறிமுகம் - இந்திய விலை மற்றும் முழு விவரம்

19 hours ago 27 பார்வைகள்
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் ஹோம் டிஸ்ப்ளே அறிமுகம் - இந்திய விலை மற்றும் முழு விவரம்

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஹோம்வியூ சாதனத்தை, ஹோம்பாட் மினி 2 மற்றும் ஆப்பிள் டிவி 4K ஆகியவற்றுடன் இந்தியாவில் அறிமுகம் செய்த்து. இதன் மூலம், ஒரு ஸ்மார்ட் ஹோம் கண்ட்ரோல் பேனல், பொழுதுபோக்கு அமைப்பு மற்றும் வீடியோ அழைப்பு சாதனம் ஆகியவற்றை ஒரே தயாரிப்பில் ஒன்றிணைக்கிறது.

ஹோம்வியூவின் பின்னணியில் உள்ள நோக்கம், குடும்பங்களுக்கு அன்றாடப் பணிகளுக்காக ஒரு பகிரப்பட்ட திரையை வழங்குவதும், அதே நேரத்தில் ஒவ்வொருவரும் தங்களின் சொந்த செய்திகள், நினைவூட்டல்கள், நாட்காட்டி பதிவுகள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை அணுக அனுமதிப்பது என ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

ஆப்பிள் ஹோம்வியூ சாதனத்தின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று சிரி ஏஐ ஆகும். இது ஆப்பிளின் வாய்ஸ் அசிஸ்டண்ட்-இன் மறுவடிவமைக்கப்பட்ட வெர்ஷன் ஆகும். இது மிகவும் இயல்பான உரையாடல்களையும், கோரிக்கைகளை சிறப்பாக புரிந்துகொள்ளும் திறனையும் வழங்கும். பயனர்கள் தங்கள் ஐபோன்களை எடுக்காமலேயே கேள்விகளை கேட்கலாம், இசையை கண்டறியலாம் மற்றும் தகவல்களை பெறலாம்.

ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் சப்போர்ட் கொண்டிருக்கும் ஐபோன் அல்லது ஐபேட் மாடலுடன் இணைக்கப்படும்போது, ​​சிரி ஏஐ மெசேஜஸ் மற்றும் காலண்டர் போன்ற செயலிகளில் இருந்து தனிப்பட்ட சூழலை பயன்படுத்தி, மிகவும் பொருத்தமான பதில்களை வழங்கவும், பயனர்கள் பணிகளை முடிக்க உதவ முடியும்.

ஹோம்வியூ, facial recognition மூலம் ஆறு பேர் வரை அடையாளம் கண்டு, தனிப்பட்ட செயலிகள் மற்றும் விட்ஜெட்களுடன் ஒரு பிரத்யேக ஹோம் ஸ்கிரீனை காண்பிக்கிறது. இருப்பினும், அடையாளம் காணப்பட்ட பயனர், தங்களுடைய இணைக்கப்பட்ட ஐபோன் அல்லது ஐபேட் அருகில் இருந்து, அது சமீபத்தில் திறக்கப்பட்டிருந்தால் மட்டுமே தனிப்பட்ட தகவல்கள் காட்டப்படும்.

இதை கொண்டு பயனர்கள் ஃபேஸ்டைம் அழைப்புகளை மேற்கொள்ளலாம், செய்திகளை அனுப்பலாம் மற்றும் பதில் அளிக்கலாம், ஆப்பிள் மியூசிக் மற்றும் பாட்காஸ்ட்களைக் கேட்கலாம். இவைதவிர ஆதரிக்கப்படும் வீடியோ மற்றும் ஆடியோ செயலிகளை பயன்படுத்தலாம்.

இந்தியாவில் ஆப்பிள் ஹோம்வியூ மாடலின் விலை ரூ. 39,900 ஆகும். இதற்கான முன்பதிவுகள் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் செயலி வழியாக தொடங்கியுள்ளன. இந்த சாதனம் நவம்பர் 13-ஆம் தேதி விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய ஹோம்வியூ மாடல் சில்வர், ஸ்டார்லைட், ரோஸ் பிங்க் மற்றும் ஸ்பேஸ் கிரே ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. தாழ்வாரங்கள் மற்றும் நுழைவாயில்கள் போன்ற இடங்களில் சாதனத்தை நிறுவ விரும்பும் பயனர்களுக்காக, சுவரில் பொருத்தக்கூடிய பதிப்பையும் ஆப்பிள் வழங்குகிறது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்