சிறப்புச் செய்தி

119-வது ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் விஜய் மரியாதை

13 hours ago 32 பார்வைகள்
119-வது ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் விஜய் மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அவரது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா 3 நாட்கள் வெகு விமரிசையாக நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு 119-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது.

முதல் நாளான 28-ந் தேதி முத்துராமலிங்க தேவரின் ஆன்மீக விழாவாகவும், 2-ம் நாளான 29-ந்தேதி அரசியல் விழாவாகவும், 3-ம் நாளான 30-ந்தேதி குருபூஜை விழாவாகவும் நடைபெறும். இதில் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்துவார்கள்.

கடந்த ஆண்டு வரை தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் முதலமைச்சர்களான ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவரும், முதலமைச்சருமான விஜய் பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருகிற 30-ந்தேதி நடைபெறும் தேவர் ஜெயந்தியன்று அனைத்து கட்சி தலைவர்களும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் கூடி அவருக்கு மரியாதை செலுத்துவார்கள். கடந்தாண்டு துணை ஜனாதிபதியான தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் த.வெ.க., சார்பில் முதன்முதலாக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் பசும்பொன் கிராமத்திற்கு சென்று தேவருக்கு மரியாதை செலுத்தினார். அதேபோல் விஜய் பனையூரில் உள்ள த.வெ.க., அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவர் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். தற்போது அவர் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இதையடுத்து முதன்முறையாகவும், முதலமைச்சராகவும் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதையொட்டி விழா நடைபெறும் வருகிற 30-ந்தேதி காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை வருகை தர இருக்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்படும் அவர் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இதையடுத்து வேனில் பசும்பொன் செல்லும் முதலமைச்சர் விஜய், முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்த இருப்பதாகவும், அவரது புகழ் பரப்பும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் விஜய்யின் பசும்பொன் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகலாம் என்றும், அதனைத் தொடர்ந்து முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விரிவான ஆலோசனையில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்