சிறப்புச் செய்தி

தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரம்: பெரியாறு, வைகை அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

16 hours ago 16 பார்வைகள்
தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரம்: பெரியாறு, வைகை அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழைப்பொழிவு இல்லாததால் நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக வறண்டு கிடந்த மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக போடி அருகே உள்ள அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் சுருளி அருவி எல்லப்பட்டி தடுப்பணை, சின்னசுருளி என்ற மேகமலை அருவி, பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி ஆகியவற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படவாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் கம்பம் மெட்டு சாலை, குமுளி மலைச்சாலை, மேகமலை ஹைவேவிஸ் மற்றும் போடி மெட்டுச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். மழை, பேரிடர் தொடர்பான புகார்களை 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 43.77 அடியாக உள்ளது. நேற்று 400 கனஅடியாக இருந்த நீர்வரத்து 696 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் திட்டங்களுக்காக 86 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 1279 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.75 அடியாக உள்ளது. நீர்வரத்து 613 கன அடியில் இருந்து 718 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 2042 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 27.40 அடியாக உள்ளது. 9 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 111.03 அடியாக உள்ளது. 53 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

வீரபாண்டி 2.2, போடி 16.6, உத்தமபாளையம் 4.8, கூடலூர் 0.6, பெரியாறு அணை 0.6, தேக்கடி 0.8, சண்முகாநதி 0.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மழை தொடரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்