டெல்லியில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், உச்ச நீதிமன்றம் விடுத்த இந்த போராட்ட' எச்சரிக்கை மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள சாலைப் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களை தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கிண்டலாக எச்சரித்தது. நவம்பர் 25-க்குள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க தவறினால், நீதிமன்றத்தின் முதன்மை வாயிலுக்கு முன்பாக தாங்களே போராட்டத்தில் (தர்ணா) ஈடுபடப் போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால், நாங்கள் இருவரும் (உச்சநீதிமன்ற அமர்வு) டெல்லி உயர் நீதிமன்றத்தின் முதன்மை வாயிலுக்கு வந்து அமர்ந்துவிடுவோம். பணிகளை முடிக்கும் வரை நாங்கள் வீட்டிற்குச் செல்ல மாட்டோம், அது உறுதி. உங்களையும் வீட்டிற்குச் செல்ல விடமாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
வழக்கின் விசாரணையின் போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (Additional Solicitor General) நீதிமன்றத்திடம், ஒரு குழு இந்த விவகாரத்தை ஆய்வு செய்து வருவதாகவும், உயர் மட்ட அதிகாரிகளிடம் தான் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், இவ்வளவு உயர்மட்டக் குழுவின் தேவை என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், களத்தில் உள்ள துல்லியமான சிக்கல்களை கண்டறிந்து தீர்வுகாண (அமிகஸ் கியூரி- amicus curiae) நீதிமன்றத்திற்கு உதவும் வழக்கறிஞர் உதவியைப் பெறலாம் என்று பரிந்துரைத்தது.
இந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு அருகில் மதுரா சாலையில் உள்ள சந்திப்பில் நிலவும் சாலைப் பாதுகாப்பு குறித்ததாகும். அங்கு முறையான போக்குவரத்து மேலாண்மை மற்றும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு வசதிகள் இல்லாதது குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
அதிகாரிகள் வெறும் குழு விவாதங்களுடன் நின்றுவிடாமல், அடுத்த விசாரணைக்கு முன்பாக தேவையான களப்பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உறுதியான தீர்வை செயல்படுத்த தவறினால், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுடன் இணைந்து தலைமைச் செயலாளரும் (Chief Secretary) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்று நீதிமன்றம் எச்சரித்தது.
இந்த வழக்கு நவம்பர் 25-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.