தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
1. திருப்பூர் மாவட்டத்திலுள்ள 2,455 ஊரகக் குடியிருப்புகளில், 1,223 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தாராபுரம், காங்கேயம், குண்டடம், பொங்கலூர், வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மூலனூரின் 7 ஊராட்சிகள், பல்லடத்தின் 17 ஊராட்சிகளைச் சார்ந்த மொத்தம் 1,232 ஊரகக் குடியிருப்புகளுக்கு, காவிரி ஆற்றுநீரினை ஆதாரமாகக் கொண்ட புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் 1,439 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
2. தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடற்றவர்களுக்கு 2,700 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும். தாராபுரம் வட்டம், சின்னபுத்தூர் கிராமம், மஜரா குருவப்ப நாயக்கன் பாளையத்தில் 20 ஆண்டுகளாக வீடுகட்டி குடியிருந்துவரும் சுமார் 87 குடும்பங்களுக்குப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
3. திருப்பூர் மாவட்டத்தில், பாசன கால்வாய்களில் உள்ள மண்திட்டுக்களை அகற்றி தூர்வாரும் 159 பணிகள் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாசன வாய்க்கால்களில் உள்ள மண்திட்டுகள், புதர்கள் மற்றும் முட்செடிகளை அகற்றி சுமார் 271 கிலோ மீட்டர் நீளத்திற்கு வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
4. தாராபுரம், மூலனூர், குண்டடம் வட்டாரங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து, சுமார் 13,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
5. தாராபுரம் வட்டம், மூலனூரில் ஒரு புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும்.
6. தாராபுரம் நகராட்சியில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளும், சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளும், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளும், மேலும் மழைநீர் வடிகால் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட அறிவிப்புகளை விரைவாக நிறைவேற்றிட சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.