சிறப்புச் செய்தி

கோவையில் பிளஸ்-1 மாணவன் தற்கொலை - பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்!

44 minutes ago 7 பார்வைகள்
கோவையில் பிளஸ்-1 மாணவன் தற்கொலை - பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்!

கோவை பீளமேடு அருகே உள்ள ஏ.டி.காலனியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி கவுசல்யா தேவி. இவர்களுக்கு நேத்ரா (வயது 19) என்ற மகளும், அகிலன் (16)என்ற மகனும் இருந்தனர். நேத்ரா அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

அகிலன் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான். இதனால் குடும்பத்தினர் பீளமேடு பகுதியில் தங்கி வந்துள்ளனர். அசோக்குமார் வாழையாறு அருகே லாண்டரி கடை நடத்தி வருகிறார். கவுசல்யா தேவி பீளமேட்டில் உள்ள வீடு ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 21-ந்தேதி காலையில் மாணவர் அகிலன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றான். அதன் பிறகு மதியம் சாப்பாட்டிற்காக கவுசல்யா தேவி வேலை பார்த்த இடத்தில் இருந்து வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டிற்குள் அகிலன தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த கவுசல்யா தேவி கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உறவினர்கள் திரண்டனர்.

மாணவன் அகிலன் தற்கொலை செய்ததற்கு அவன் படித்த பள்ளியில் வேலை பார்த்து வரும் தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜய–குமார் மற்றும் அவனுடன் படித்து வரும் 2 மாணவர்கள் தான் காரணம் என அகிலனின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று பீளமேடு போலீஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அகிலனின் சாதி குறித்து தெரிந்ததால், அவனை ஆசிரியர் விஜயகுமார் தனிமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களும் அகிலனுடன் விளையாடுவது, பேசுவதை தவிர்த்து வந்துள்ளனர். இதனால் நீண்ட நாட்களாக அகிலன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம் புகார் தெரிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே அகிலன் சாதிய கொடுமையால் இறந்துள்ளதாகவும் இதற்கு காரணமான தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் மற்றும் அவனுடன் படிக்கும் 2 மாணவர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

அதன் பிறகுதான் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் உள்ள அகிலனின் உடலை வாங்கி செல்வோம் என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பீளமேடு போலீசார் தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் மற்றும் 2 மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வோம் என்றும் உறுதி கூறினர்.

ஆனால் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும் எனக்கூறி அகிலனின் உறவினர்கள் தொடர்ந்து இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவையில் பதட்டம் நிலவியது.

இந்த பிரச்சனையில் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரை சந்தித்து 4 பேரையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முற்றுகை இடப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு துணை காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், 4 உதவி காவல் ஆணையர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையே அகிலனின் பெற்றோர் அசோக்குமார், கவுசல்யா தேவி மற்றும் அவர்களுக்கு ஆதரவாக 23 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், அகிலனின் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அங்கு அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, ஆட்சியர் பவன் குமாரிடம் அகிலனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 4 பேரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

அதேபோன்று சாதியின் பெயரில் பள்ளிகள் இயங்குவதை தடை செய்ய வேண்டும் என்பதையும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.

பவன்குமார் இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதற்கிடையே தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) ரம்யா பாரதிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடடிவக்கை குறித்து அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவர் அகிலன் தற்கொலை பிரச்சினை தொடர்பாக அவன் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் பள்ளி நிர்வாகம் மூலம் இன்று அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்