சிறப்புச் செய்தி

பிரேசிலில் மீண்டும் இடதுசாரி ஆட்சி.. 4வது முறை அதிபராகும் லூலா - தேர்தலில் டிரம்ப் ஆதரவாளர் தோல்வி!

4 hours ago 17 பார்வைகள்
பிரேசிலில் மீண்டும் இடதுசாரி ஆட்சி.. 4வது முறை அதிபராகும் லூலா - தேர்தலில் டிரம்ப் ஆதரவாளர் தோல்வி!

லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி தலைவரும் தற்போதைய அதிபருமான லூலா டா சில்வா, முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் மகனான பிளாவியோ போல்சனாரோ இடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தல் பிரசாரத்தில் பிளாவியோ போல்சனாரோ டிரம்ப் நிர்வாகத்துடன் சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

மறுபுறம் பிரேசிலின் ஏற்றுமதிகள் மீதான வரிகள் உட்பட பிரேசில் மீதான அமெரிக்காவின் கொள்கைகளை லூலா விமர்சித்திருந்தார்.

அக்டோவர் 4 அன்று நடந்த முதற்கட்ட வாக்குபதிவு முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நேற்று (அக்டோபர் 25) அங்கு இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையில் 78 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், லூலா 51.21 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் இருந்தார். அதே நேரத்தில் போல்சனாரோ 48.79 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டுவிட்ட நிலையில் அதிபர் லூயிஸ் லூலா டா சில்வா தனது போட்டியாளரான பிளாவியோ போல்சனாரோவை தோற்கடித்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடதுசாரியான அதிபர் லூயிஸ் லூலா டா சில்வா அமெரிக்க அதிபர் டிரம்ப் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் ஆவார். இந்நிலையில் அவரின் வெற்றி மேற்குலகில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரம் இடதுசாரி தலைமையின் கீழ் நீடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்த முடிவு, லத்தீன் அமெரிக்காவில் உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூட்டாளிகளுக்கு ஒரு பெரும் பின்னடைவாகும்.

பிரேசில் மீது ஆதிக்கம் செலுத்தும் கனவில் இருந்த டிரம்ப்புக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே வரும் நாட்களில் பிரேசில் மீது அவர் கூடுதல் வரிகளை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

லூலா டி சில்வா வரும் 2027 ஜனவரியில் அவர் மீண்டும் அதிபர் பதவி ஏற்பார். இது அவர் அதிபராகவும் 4வது முறையாகும்.

முன்னதாக ஜனவரி 1, 2003 முதல் ஜனவரி 1, 2011 வரை தொடர்ச்சியாக 2 பதவி காலங்களுக்கு பிரேசிலை அவர் ஆட்சி செய்தார்.

பின்னர் 2023 முதல் தற்போதுவரை 3வது முறையாக அதிபராக உள்ளார். 2027 முதல் 4வது முறை அதிபராகிறார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்