சிறப்புச் செய்தி

லூலா வெற்றியை ஜீரணிக்க முடியாத டிரம்ப்?.. பிரேசில் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு

1 hour ago 11 பார்வைகள்
லூலா வெற்றியை ஜீரணிக்க முடியாத டிரம்ப்?.. பிரேசில் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு

பிரேசிலில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான லூயிஸ் இனா சியோ லூலா டா சில்வா மீண்டும் வெற்றி பெற்றார்.

இடதுசாரி தலைவரான லூலா 4வது முறையாக அதிபராகி உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிளாவியோ போல்சனாரோ தோல்வி அடைந்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளரான பிளாவியோ போல்சனாரோ தனது தோல்வியை ஏற்க மறுத்து உள்ளார். தேர்தலில் முறைகேடு நடந்து உள்ளதாக அவர் கூறி உள்ளார். தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரேசில் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.

மேரிலாந்தில் நிருபர்களிடம் பேசிய டிரம்ப், "பிரேசில் தேர்தலில் நான் எந்தப் பக்கமும் சாயவில்லை. நான் யாரையும் ஆதரிக்கவில்லை. ஆனால் வெளிப்படையாக சொன்னால் இது மீண்டும் ஒரு முறைகேடான தேர்தல் போலவே தோன்றியது. தேர்தல்கள் எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றி இருக்க வேண்டும்.

ஆனால் இந்த தேர்தல் எனக்கு மிகவும் மோசமான ஒன்றாகவே தெரிகிறது. வாக்குகள் கணக்கிடப்பட்ட விதம், வாக்குபதிவுக்கு நேர நீட்டிப்பு ஆகியவை மிகவும் மோசமான தோற்றத்தையே ஏற்படுத்தியது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

அப்போது பிரேசில் தேர்தல் குறித்து ஏதாவது செய்வீர்களா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு டிரம்ப் பதிலளித்தபோது, நான் பிரேசிலை ஆளவில்லை. நான் அமெரிக்காவை ஆளுகிறேன். லூலாவுடன் தனக்கு நல்லுறவு இருப்பதாக தெரிவித்தார்.

டிரம்பின் கூற்று முற்றிலும் தவறானது என்றும் ஆதாரமற்ற பேச்சு என்றும் பிரேசில் துணை அதிபர் ஜெரால்டோ ஆல்க்மின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த கால தேர்தல்கள் அல்லது விரைவில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்கால தேர்தலில் வாக்காளர் மோசடியில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ8.3 கோடி) பரிசு வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்