அர்னாப் புயல் தாக்கத்தால் புதுச்சேரி மாநிலத்தின் பிராந்தியமான ஏனாம் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. இதனை சீரமைக்க இடைக்கால நிதி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமி மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஏனாமை தாக்கிய புயல் கடந்த 28-ந் தேதி அதிகாலை நரசாபூர் அருகே கரையை கடந்தது. மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று 150 கி.மீ வரை வீசியது. 113.20 மி.மீ மழை பதிவானது.
புயலால் ஏனாமில் 101 ஹெக்டேரில் நெற்பயிர் முழுமையாக நாசம், தென்னை, வாழை பயிர் சேதம். சுமார் 30 வீடுகள் முழுமை, பகுதி சேதம், தாழ்வான குடியிருப்புகளில் வெள்ளம். மின் கம்பங்கள், கம்பிகள் சேதம், சாலைகள், குடிநீர் குழாய்கள் சேதம்.அரசு கட்டிடங்கள், பள்ளிகள், அரசு பொது மருத்துவமனை சேதம். மீன்பிடி படகுகள், வலைகள், மீன் வளர்ப்பு குளங்கள் சேதம், சரிந்த மரங்கள் அகற்றுதல், மின்சாரம், குடிநீர் சீரமைப்பு போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
ஆனால் ஏனாம் சிறிய, தனித்த பகுதியாக இருப்பதாலும், வளங்கள் குறைவாக இருப்பதாலும் மத்திய அரசின் உடனடி உதவி அவசியம்.
எனவே விரிவான சேத மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கும் வரை, இடைக்கால நிவாரணமாக ரூ.50 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், சேதத்தை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை விரைவில் அனுப்ப வேண்டும். துறை வாரியான முழு சேத அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும்
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.