முதலமைச்சர் விஜய் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
அதன்படி இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெறும் அரசு சார்பில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு கட்சி நிர்வாகிகள், சாலையில் திரண்டு இருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக பெருந்துறைக்கு புறப்பட்டு சென்றார். மொத்தம் 7 இடங்களில் மக்களை சந்திக்கும் வகையில் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோட்டிற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
அதன்படி முதலில் செங்கம்பள்ளி பாலத்தில் இருந்து முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்ச்சி தொடங்கியது. வாகனத்தில் நின்றவாறு முதலமைச்சர் விஜய் பொதுமக்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தார்.
சாலையின் இரு புறங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதலமைச்சரை பார்த்ததும் பொதுமக்கள் உற்சாக மிகுதியில் தளபதி தளபதி என்று கோஷம் எழுப்பினர். பதிலுக்கு முதலமைச்சர் விஜய் பொதுமக்களை பார்த்து சிரித்தவாறு கையை அசைத்தார்.
இதைத்தொடர்ந்து பள்ள கவுண்டன்பாளையம் பகுதிக்கு முதலமைச்சர் வாகனம் சென்றது. அங்கு வாகனத்தில் நின்றவாறு முதலமைச்சர் சாலையில் இரு புறங்களிலும் நின்று கொண்டு இருந்த பொதுமக்களை நோக்கி உற்சாகமாக கை அசைத்தார்.
அதைத்தொடர்ந்து விஜயமங்கலம், பெருந்துறை புறவழி சாலை சிப்கார்ட், பெருந்துறை புது பஸ் நிலையம், பெருந்துறை பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை ஆகிய இடங்களில் பொதுமக்களை சந்திக்கும் பிரம்மாண்ட ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. மொத்தம் 22 கிலோமீட்டர் தூரம் முதலமைச்சர் விஜய் வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களை நோக்கி கையசைத்தபடி வந்தார்.
பின்னர் அங்கிருந்து விழா நடைபெறும் இடமான பெருந்துறை பைபாஸ் சாலை, காஞ்சிகோவில் பிரிவில் உள்ள லட்சுமி நாராயணன் மண்டபத்துக்கு முதலமைச்சர் விஜய் வந்தார். அவரை அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், விஜய் பாலாஜி, கலெக்டர் கந்தசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் வழங்கும் விழா நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், சேலம் உள்பட 13 மாவட்டங்களை ஒருங்கிணைத்த 9 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.1, 110 கோடி மதிப்பில் வங்கி கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.