சிறப்புச் செய்தி

தொடர் கனமழை - திருச்செந்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

12 hours ago 13 பார்வைகள்
தொடர் கனமழை - திருச்செந்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடும் வெயில் மக்களை வாட்டியது. இதனால் இந்த ஆண்டு பருவமழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியது.

இந்த நிலையில் மன்னார் வளைகுடா முதல் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை சுமார் 900 மீட்டர் உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

நேற்று அதிகாலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. காயல்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை காலை 10 மணி வரை நீடித்தது. அதன்பிறகு சாரல் மழையாக பெய்து கொண்டே இருந்தது.

தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. அவ்வப்போது மழை நின்றாலும் மேகங்கள் திரண்டு இருந்தன. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. நேற்று காலையில் நேரத்தில் மழை பெய்ததால் மாணவ- மாணவிகள் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் பள்ளிக்கூடத்துக்கு சென்றனர். மாவட்டத்தில் சில பள்ளிக்கூடங்களில் தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பரமன்குறிச்சி, காயாமொழி, ஆலந்தலை, கல்லாமொழி, நா.முத்தையாபுரம், நடுநாலுமூலைகிணறு, கீழநாலுமூலைகிணறு, வீரபாண்டியன்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பரவலான மழை பெய்தது. தொடர்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இந்த மழையால் திருச்செந்தூர் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் சாலையில் தேங்கியது. தாழ்வான குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கிரிபிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதேபோல் சிவன் கோவில் வளாகத்திலும், ரெயில் நிலையம் அருகில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலிலும் மழைநீர் புகுந்தது.

இந்நிலையில், திருச்செந்தூர், காயல்பட்டினம், குரும்பூர், நாசரேத் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் இடைவிடாது மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்