சிறப்புச் செய்தி

மாரடைப்பால் உயிரிழந்த தந்தை.. சகோதரியின் திருமணம் நின்றுவிடக்கூடாது என சகோதரர்கள் சொன்ன பொய்

10 hours ago 15 பார்வைகள்
மாரடைப்பால் உயிரிழந்த தந்தை.. சகோதரியின் திருமணம் நின்றுவிடக்கூடாது என சகோதரர்கள் சொன்ன பொய்

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தின் ரிஷபதேவ் துணைப் பிரிவில் உள்ள படியார் கிராமத்தைச் சேர்ந்த சங்கர்லால் மேக்வால் (51), தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திலீப் (24), உமேஷ் (22) என இரு மகன்களும் பிரியங்கா (26) என்ற மகளும் உள்ளனர்.

மகள் பிரியங்கா (26) வுக்கு நவம்பர் 21 அன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு முன்பு, நவம்பர் 20 ஆம் தேதி இரவு 'பிந்தோலி' எனப்படும் பாரம்பரிய ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவின் போது சங்கர்லால் தனது உறவினர்களுடன் மகிழ்ச்சியாக நடனமாடினார். திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.

அவரை ரிஷபதேவில் உள்ள மருத்துவமனைக்கும், பின்னர் உதய்பூரில் உள்ள எம்.பி. மருத்துவமனைக்கும் மகன்கள் கொண்டு சென்றனர்.

இருப்பினும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். உடல் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.

அடுத்த நாள் தங்கையின் திருமணம் நடைபெற இருந்ததால், அவரின் மகன்கள் ஒரு கடினமான முடிவை எடுத்தனர்.

தந்தையின் மரணச் செய்தி வெளிவந்தால், தாயும் சகோதரியும் அதைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்றும், திருமண விழா நின்றுவிடும் என்றும் அவர்கள் நினைத்தார்கள்.

தந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பேசும் நிலையில் இல்லை என்றும் அவர்கள் குடும்பத்தினரை நம்ப வைத்தனர்.

அவர்கள் உடனடியாக மணமகனின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து, திருமணத்தை விரைவாக முடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இதன்படி, மணமகனும் அவரது குடும்பத்தினரும் சுமார் 25 கிலோமீட்டர் பயணம் செய்து, அன்றிரவே திருமண மண்டபத்தை அடைந்தனர்.

பிரியங்காவின் திருமண விழா நவம்பர் 21 அன்று அதிகாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு சென்ற உடன் அன்றைய தினமே தந்தையின் இறுதி சடங்கு நடைபெற்றது.

அதன்பின் மாமியார் வீட்டிற்கு சென்ற பிரியங்காவை அவளது சகோதரர்கள் அழைத்து உண்மையை கூறினர்.

தன் தந்தையை கடைசி முறையாக கூடப் பார்க்க முடியவில்லையே என்ற துக்கத்தையும் கோபத்தையும் பிரியங்கா வெளிப்படுத்தியதாக தெரிய வருகிறது. கணவரின் மரணச் செய்தியைக் கேட்ட பிறகு பிரியங்காவின் தாயும் நோய்வாய்ப்பட்டதாக தெரிகிறது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்