சிறப்புச் செய்தி

நேபாள வெள்ளத்தில் மாயமான 213 இந்தியர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்க முடிவு

9 hours ago 14 பார்வைகள்
நேபாள வெள்ளத்தில் மாயமான  213 இந்தியர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்க முடிவு

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும் வெளிநாட்டினர் உட்பட 5,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மாயமான பலர் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் உயிருடனோ அல்லது சடலமாகவோ இன்னும் கண்டறியப்படவில்லை. நீண்ட காலமாக காணாமல் போனவர்களை இறந்தவர்களாக அறிவிக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, 12 நாடுகளின் தூதரகங்கள் மூலம் 452 வெளிநாட்டினரின் விவரங்கள் பெறப்பட்டன.

இவர்களில், 213 பேர் இந்தியர்கள், அதனைத் தொடர்ந்து 85 பேர் சீனர்கள், 69 பேர் அமெரிக்கர்கள், 32 பேர் பிரிட்டிஷ் நாட்டினர் மற்றும் 27 பேர் கனடியர்கள் ஆவர்.

நேபாளத்தின் தேசிய பேரிடர் மற்றும் மேலாண்மை ஆணையம், காணாமல் போன 213 இந்தியக் குடிமக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஆட்சேபனைகள் பெறப்பட்டு வருகின்றன.

காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், காணாமல் போன இந்தியர்களின் குடும்பங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தப் பட்டியலை மறுபரிசீலனை செய்து, ஏதேனும் ஆட்சேபனைகள், மாற்றங்கள் அல்லது கூடுதல் தகவல்கள் இருந்தால் டிசம்பர் 2ஆம் தேதிக்குள் தங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தக் காலக்கெடுவுக்குள் தங்களது ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்குமாறு குடும்ப உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆட்சேபனைகள் பெறப்பட்ட பிறகு, நேபாள அரசு இறுதிப் பட்டியலை தயாரித்து, காணாமல் போனவர்களை அதிகாரப்பூர்வமாக இறந்தவர்களாக அறிவிக்கும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் நேபாளத்தில் உள்ள சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து இறப்புச் சான்றிதழ்களைப் பெறும் செயல்முறையைத் தொடங்குவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

இந்தச் செயல்பாட்டில் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கூடுதல் தகவல்களும் ஆவணங்களும் தேவைப்படலாம் என்றும், மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்