இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நாளை தொடங்குகிறது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்குச் சென்றுள்ளது.

இரு அணிகள் இடையே 4 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. கடைசியாக 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பெங்களூருவில் நடந்த போட்டியில் இந்தியா 238 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை மண்ணில் கடைசியாக 2017-ல் நடந்த பல்லேகலே டெஸ்டிலும் இன்னிங்ஸ் மற்றும் 171 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

இந்திய அணி கடைசியாக சொந்த மண்ணில் கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் வென்றது. கொழும்பில் இலங்கை லெவனுக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்ததால் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சாய் சுதர்சன் காயத்தால் தொடரில் இருந்து விலகியதால் அவரது இடமான 3-வது வரிசையில் தேவ்தத் படிக்கல் ஆடுகிறார். அவர் பயிற்சி ஆட்டத்தில் 142 ரன் குவித்து இருந்தார். கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாகவும், கேப்டன் சுப்மன் கில் 4-வது வரிசையிலும் இடம்பெறுவார்கள்.

முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு பெறுவார். துருவ் ஜூரல் இடத்தில் சர்பிராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

சுழற்பந்தில் ஆல்ரவுண்டர் ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார், வேகப்பந்தில் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும். குர்னூர் இடம் பெற்றால் மானவ் சுதார் கழற்றி விடப்படலாம். 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வது கேப்டன் சுப்மன் கில்லுக்கு சவாலாக இருக்கும்.

தனஞ்செய டி சில்வா தலைமையிலான இலங்கை அணி சொந்த மண்ணில் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் உள்ளது. அந்த அணி கடைசியாக கடந்த மாதம் வெஸ்ட் இண்டீசில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்தது. சொந்த மண்ணில் கடைசியாக 2025-ல் வங்காளதேத்தை வீழ்த்தி (1-0) இருந்தது.

நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணிகளும் நாளை மோதுவது 47-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடைபெற்ற 46 போட்டியில் இந்தியா 22-ல், இலங்கை 7-ல் வெற்றி பெற்றுள்ளன. 17 டெஸ்ட் டிரா ஆனது. இலங்கையில் இந்திய அணி 8 டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. இதில் இரு அணிகளும் தலா 3 தொடரை கைப்பற்றி உள்ளன. 2 தொடர் சமனில் முடிந்தது. கடைசியாக இலங்கையில் 2017-ல் ஆடிய 3 டெஸ்டிலும் இந்திய அணி வென்று ஒயிட்வாஷ் (3-0) செய்தது குறிப்பிடத்தக்கது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel