பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
கல்வி வளர்ச்சிக்காக, தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் பள்ளிக் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைப்பாட்டை தடுக்கவும், பள்ளி வருகையை அதிகரித்து, இடைநிற்றல் இல்லாத தொடர்ச்சியான கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்காக கடந்த 2022-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்.
பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 37 ஆயிரத்து 447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 19.34 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
த.வெ.க. ஆட்சி அமைந்தவுடன் இந்த உணவு திட்டத்தின் பெயர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என்று மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், இதன் மூலம் கூடுதலாக 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
இந்த விரிவாக்க திட்டம் கடந்த 17-ந்தேதி அன்று பெரியார் பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் லண்டன் சென்றதால், திட்டத்தின் தொடக்க விழா 22-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய், சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் 34 லட்சத்து 64 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் பெறுவார்கள் என்றும், இந்த திட்டத்துக்காக கூடுதலாக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் (செங்கல்பட்டு), தாராபுரம் (திருப்பூர்) ஆகிய 2 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
இந்த திட்டத்தின் உணவு பட்டியலில் திங்கட்கிழமை உப்புமா, செவ்வாய்க்கிழமை கிச்சடி, புதன்கிழமை பொங்கல், வியாழக்கிழமை - உப்புமா, வெள்ளிக்கிழமை - இனிப்பு வகை உணவு ஆகியவை இடம் பெற்றுள்ளன.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel