தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

வலி நிவாரணிகளால் சிறுநீரக பாதிப்பு: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் எச்சரிக்கை!

மருத்துவர்களின் சரியான வழிகாட்டுதல் இன்றி வலி நிவாரணி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்வது, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு மற்றும் பிற தீவிர ஆரோக்கியப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இந்தியாவில் ஸ்டெராய்டு அல்லாத வீக்க எதிர்ப்பு மருந்துகள் எனப்படும் பெரும்பாலான வலி நிவாரணிகள் ‘அட்டவணை எச்’ பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, தகுதியுள்ள மருத்துவப் பதிவாளர் அளிக்கும் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இத்தகைய மருந்துகளைக் கடைகளில் நேரடியாக விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மருந்துக் கடைகளும் சில்லறை விற்பனையாளர்களும் நோயாளிகளுக்கு பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இத்தகைய மருந்துகளை வழங்குவதையோ, சுய மருத்துவத்தை ஊக்குவிப்பதையோ உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* லேசான தலைவலி, உடல் வலி அல்லது காய்ச்சல் ஏற்பாடுகளுக்காகக் கடைகளில் நேரடியாகச் சென்று வலி நிவாரணிகள் அல்லது ஆன்டிபயாடிக் மருந்துகளை வாங்கித் தொடர்ந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

* ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அல்லது இதயம் தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்கள் வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் தங்களின் முழு ஆரோக்கிய நிலையையும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

* நோயின் அறிகுறி தொடர்ந்து நீடித்தால் சுய மருத்துவம் செய்வதை விட்டுவிட்டு தகுதியான மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

மருத்துவர்கள் நோயாளிகளுக்கு வலி நிவாரணிகளைப் பரிந்துரைக்கும் போது, குறைந்தபட்ச வீரியம் கொண்ட அளவை, மிகக் குறைந்த காலத்திற்கு மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்று CDSCO வலியுறுத்தியுள்ளது. நோயாளியின் வயது, உடலின் பிற நோய்களின் நிலை ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு பாதுகாப்பான முறையில் மருந்துகளைக் குறிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் முறையான மருந்து சீட்டு ஆய்வு முறையை அமல்படுத்தி, மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel