ஜெம் வீரமணி பாலியல் விவகாரம்: போலீஸ் அதிகாரிகள் 3 பேருக்கு சம்மன்
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பிரபல தொழில் அதிபரான ஜெம் வீரமணி மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பூதாகரமாகி வருகின்றன.
கடந்த தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட வழக்கு விசாரணை த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு தோண்டி எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதை தொடர்ந்து கடந்த மாதம் 29-ந்தேதி தொழில் அதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தோழி சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் வீரமணி அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர் கணேசன் என்பவரும் கைதானார். இதன் மூலம் வீரமணி பாலியல் வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்ட கணேசன் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று பெரம்பூரில் உள்ள பிரகாஷ் வீடு, ராயப்பேட்டையில் உள்ள பிரகாசின் அலுவலகம், கோபாலபுரத்தில் உள்ள வீரமணியின் அலுவலகங்கள், தி.நகரில் உள்ள வீடு உள்பட 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் செல்போன்கள், ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 3 இடங்களில் சோதனை நிறைவு பெற்ற நிலையில் கோபாலபுரம், தி.நகர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீரமணி தொடர்புடைய வீடியோ ஒன்றை விபசார தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிறுமிகள் நல ஆர்வலர் ஒருவர் அளித்திருந்தார்.
அவர் கொடுத்த பென் டிரைவில் ஒரு சிறுமியிடம் வீரமணி பாலியல் சீண்டலில் ஈடுபடும் காட்சிகள் இருந்துள்ளது. இந்த வீடியோ காட்சி தேனாம்பேட்டையில் உள்ள சாந்தி வீட்டின் படுக்கை அறையில் எடுக்கப்பட்டது என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் அடுத்தடுத்து வழக்கு விசாரணையை வேகப்படுத்தாமல் வீடியோவில் இருக்கும் நபரை கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் மேற்கொண்டு விசாரித்து வருகிறோம் எனவும் கோர்ட்டில் தெரிவித்து உள்ளனர்.
இதன்மூலம் வழக்கு விசாரணை தடைப்பட்டு இருந்தது. இதற்காக தொழில் அதிபர் வீரமணியிடம் போலீஸ் அதிகாரிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியிருப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு அது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
ஒரு பெண் உதவி கமிஷனர், பெண் இன்ஸ்பெக்டர், மற்றொரு ஆண் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தான் வழக்கு விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளாமல் முட்டுக்கட்டை போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து இந்த 3 அதிகாரிகளுக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. எந்த அடிப்படையில் யாருடைய நிர்பந்தத்தின் பேரில் வீரமணி மீதான வழக்கு விசாரணையை நிறுத்தி நீங்கள் தாமதப்படுத்தினீர்கள்? என்பது பற்றி விசாரிக்க வேண்டி இருப்பதால் நேரில் ஆஜராக வேண்டுமென சம்மனில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து உதவி கமிஷனரும், 2 இன்ஸ்பெக்டர்களும் விரைவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக உள்ளனர். அப்போது போலீஸ் அதிகாரிகள் 3 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்படும்.
இந்த விசாரணையின் போது மேலும் பல தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர்.
குறிப்பாக 3 அதிகாரிகளும் யாருடைய தூண்டுதல் மற்றும் அழுத்தத்தின் பேரில் வீரமணி மீதான வழக்கை கைவிட்டனர்? என்று அவர்களிடம் தகவல் சேகரிக்கப்பட இருக்கிறது. இதில் 3 பேரும் அளிக்கும் தகவலின்பேரில் இந்த வழக்கின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்ற விவரத்தை திரட்ட உள்ளனர்.
இதைத்தொடர்ந்து வீரமணி வழக்கை கிடப்பில் போட்ட விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel