ரிசர்வ் வங்கி அறிவித்தால் ஞாயிற்றுக்கிழமை பணியாற்றுவோம்- அனைத்து வங்கிகள் கூட்டமைப்பு அறிவிப்பு
வங்கிகள் வாரம் 5 நாட்கள் வேலை நாட்களாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களும் இணைந்து நடத்திய வேலை நிறுத்த போராட்டத்திற்குப் பிறகும் மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்கவில்லை.
இதுதொடர்பாக டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து வருகிற 28-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர்.
நாடு முழுவதும் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் மற்றும் பழைய தனியார் வங்கிகள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றன.
மாதத்தின் கடைசி 3 நாட்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில் அதனைச் சார்ந்த சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாட்களாக இருப்பதால் 5 நாட்கள் வங்கிகள் மூடப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
26-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை வங்கிகள் தொடர்ந்து செயல்படாமல் போனால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என கருதி மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வங்கிகளை சார்ந்துள்ள வர்த்தக பணிகள், காசோலை பரிமாற்றங்கள், அன்னிய செலாவணி உள்ளிட்ட பல்லாயிரம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் முடங்கும் நிலை ஏற்படக்கூடும்.
அதனைக் கருத்தில் கொண்டு மத்திய நிதித்துறை வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளையும் செயல்பட வைக்க வேண்டும் என்று முடிவு செய்தது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல் படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை பலவீனப்படுத்தும் முயற்சியாகவும் இது அமைந்துள்ளது.
இதுகுறித்து அனைத்து வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாஜலம் கூறியதாவது:-
வங்கிகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என்று மத்திய நிதித்துறை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி இதற்கான உத்தரவை இன்று பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமை வங்கிப் பணிகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். பொது மக்களுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
வாடிக்கையாளர் நலன் முக்கியம் என்பதை கருதி பணியில் ஈடுபடுவோம். வங்கி சேவையில் ஈடுபட சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தமிழக அரசும் வங்கிகள் செயல்படுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். அன்று வேலை நாளாக அறிவித்திருப்பதால் இரு மடங்கு ஊதியம் வழங்கப்படும்.
எங்களது போராட்டத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இதை அறிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel