மீண்டும் 3 கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை அறிவித்த கரப்பான்பூச்சி கட்சி - ஞானேஷ் குமாருக்கு 48 மணிநேரம் கெடு!
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும், இல்லையென்றால் ஜந்தர் மந்தர் 2.0 கண்டிப்பாக உருவாகும் என கரப்பான்பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அபிஜீத் தீப்கே.,
இளைஞர்களுக்கு எதிராக மிகப்பெரிய சதி திட்டமிட்டு தீட்டப்பட்டு வருகிறது. இதை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எதிர்க்கட்சிகள் மீதோ, அது பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என எந்தக் கட்சியோடும் எங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை.
இது கட்சி சார்ந்த பிரச்னை இல்லை. நாட்டின் இளைஞர்கள் சம்பந்தப்பட்டது. நாங்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், அவர் மீது உடனடியாகக் குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும், மேலும் “ஞானேஷ் குமாருக்கு உத்தரவிட்டது யார்? அவருக்கு உத்தரவிட்டது யார்?” என்ற கேள்விக்கு விடை அளிக்கப்பட வேண்டும்.
நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். தற்போதைய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்களை நிறுத்திவைத்து, 2025 வாக்காளர் பட்டியலுக்கு திரும்ப வேண்டும்.
பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும்வகையில் எஸ்ஐஆர் நடைமுறைகள் குறித்து ஆய்வுநடத்த சுதந்திரமான விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். இதில் உச்ச நீதிமன்றத்திற்கும் பொறுப்பு உள்ளது.
மேலும் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பான அனைத்து கோப்புகளையும் கைப்பற்றி நீதிமன்ற பாதுகாப்பில் வைக்க வலியுறுத்திகிறோம். ஏனெனில் நாளை தீவிபத்தில் அனைத்தும் எரிந்துவிட்டது எனக் கூறிவிடுவார்கள்.
இந்தியத் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான 2023-ஆம் ஆண்டுச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, சிவில் சமூகத்தினரின் தீவிரப் பங்கேற்புடன், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையிலான ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel