சிறப்புச் செய்தி

அமைச்சர் முன்னிலையில் காங்கிரஸ் எம்.பி.க்கு ஏற்பட்ட அவமானம் வருத்தம் அளிக்கிறது- செல்வப்பெருந்தகை ஆதங்கம்

7 hours ago 12 பார்வைகள்
அமைச்சர் முன்னிலையில் காங்கிரஸ் எம்.பி.க்கு ஏற்பட்ட அவமானம் வருத்தம் அளிக்கிறது- செல்வப்பெருந்தகை ஆதங்கம்

திருச்சியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தும் அரசு விழா அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக்கும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்ற கிறிஸ்டோபர் திலக் எம்.பி.யிடம் அமைச்சர் ரமேஷ் மெழுகுவர்த்தியை கொடுத்தார். இதில் அதிருப்தி அடைந்த திருவெறும்பூர் த.வெ.க. எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி எம்.பி.யிடம் இருந்து மெழுகுவர்த்தியை வாங்க முயன்றார்.

இதை கவனித்த அமைச்சர் ரமேஷ் எம்.பி. ஏற்றிய பிறகு நீங்கள் ஏற்றுங்கள் என்று கூறி இருக்கிறார். அதை கேட்டு கோபம் அடைந்த எம்.எல்.ஏ. விஜி கிறிஸ்டோபர் திலக் எம்.பி. கையில் இருந்த மெழுகு வர்த்தியை தட்டிவிட்டார். பொது நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவம் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

அமைச்சர் முன்னிலையில் கூட்டணி கட்சியான காங்கிரசை சேர்ந்தவரும் தலித் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவருமான கிறிஸ்டோபர் திலக் எம்.பி. அவமானப்படுத்தப்பட்டு இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

அதேநேரம் நடந்த சம்பவத்துக்காக இதுவரை யாரும் வருத்தம் கூட தெரிவிக்காதது அதைவிட வருத்தமாக உள்ளது. இது எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை.

உணர்ச்சி வேகத்திலோ அல்லது தெரியாமல் இந்த தவறை எம்.எல்.ஏ. செய்து இருந்தாலும் இதுவரை கண்டித்து எம்.பி.க்கு ஏற்பட்ட அவமானத்தை அமைச்சர் துடைத்து இருக்க முடியும். அதையும் அமைச்சர் செய்யாதது வருத்தமான விசயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்