சிறப்புச் செய்தி

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான பணப்பரிமாற்ற வழக்கு ரத்து-சென்னை உயர்நீதிமன்றம்

8 hours ago 19 பார்வைகள்
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான பணப்பரிமாற்ற வழக்கு ரத்து-சென்னை உயர்நீதிமன்றம்

செம்மண் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்த பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரையும் குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுவித்து கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. செம்மண் முறைகேட்டின் மூலம் பெறப்பட்ட பெருந்தகைப் பணம் ஹவாலா மூலமாக வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்து, கடந்த 2023-ல் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி மற்றும் அவரது மகன் தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, மூல வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்ட சூழலில், அமலாக்கத்துறை தொடர்ந்த பணப்பரிமாற்ற வழக்கை மட்டும் தொடர சட்டத்தில் இடமில்லை என்று தெளிவுபடுத்தி வழக்கை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்