தனது குடும்பத்தை கொலை செய்ய நினைத்த விநாயகத்தை, ரஜினிகாந்த் தீர்த்து கட்டியதுடன் ஜெயிலர் முதல் பாகம் முடிவடைந்தது. அதில் இருந்து இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது.
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை கொலை செய்த பிறகு குடும்பத்துடன் கோவையில் செட்டிலாகிறார் ரஜினிகாந்த். விநாயகனை கொலை செய்த ரஜினிகாந்தை எப்படியாவது பழி தீர்க்க துடிக்கிறார் சுராஜ் வெஞ்சரமூடு.
இதற்கிடையில் சுராஜ் வெஞ்சரமூடுவின் கூடாரத்தில் சேரும் ரஜினிகாந்த், அந்தக் கூட்டத்துக்கு உத்தரவுகளை பிறப்பித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவை நெருங்க நினைக்கிறார். இதன் காரணமாக ரஜினிகாந்தின் குடும்பத்துக்கு மீண்டும் சோதனைகள் ஏற்படுகிறது. அவர் குடும்பத்தை தீர்த்துக்கட்ட மீண்டும் ஒரு கும்பல் வருகிறது.
இக்கட்டான சூழலில் தனது குடும்பத்தை ரஜினிகாந்த் காப்பாற்றினாரா? எஸ்.ஜே.சூர்யா, ரஜினிகாந்தை பழிதீர்க்க துடிப்பது ஏன்? விநாயகத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட பல கோடி மதிப்பிலான சிலைகள் எங்கே போனது? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை.
76 வயதிலும் தனது வசீகரம், ஆளுமை மற்றும் ஸ்டைல் மூலம் திரையை ஆக்கிரமிக்கிறார் ரஜினிகாந்த். 'முத்துவேல் பாண்டியன்' கதாபாத்திரத்தில் மீண்டும் களமிறங்கியுள்ள அவர், 'பாட்ஷா' பாணியிலான அந்த மேஜிக்கை மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
ரஜினிக்கு அடுத்தபடியாக ஆர்ப்பரிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார் எஸ்.ஜே.சூர்யா. சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பு சிறப்பு.
ரம்யா கிருஷ்ணனின் அழுத்தமான நடிப்பு படத்துக்கு வலு கூட்டுகிறது. மிர்னா மேனனும் கவனிக்க வைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வரும் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் சபாஷ் சொல்ல வைக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் வித்யா பாலன் தூள் கிளப்பி விட்டார். ஒரு பாடலுக்கு நடனமாடும் பூர்ணாவும் கவனிக்க வைக்கிறார்.
யோகி பாபு, நமோ நாராயணன் உள்ளிட்டோரின் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.
'ஜெயிலர்' படத்தின் தொடர்ச்சியாக, அதே பாணியில், முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே கதை தொடங்குகிறது. இயக்குநர் நெல்சன், ஒரு சாதாரண குடும்பத் தலைவன் என்ற பிம்பத்திற்குள் கதையை நேர்த்தியாகக் கட்டமைத்திருக்கிறார்.
இதில், குடும்ப உறவு சார்ந்த தருணங்கள், மாஸ்' காட்சிகள் மற்றும் கலகலப்பான நகைச்சுவை என அனைத்தும் கச்சிதமாக அமைந்துள்ளன. அதன் பிறகு வரும் ஒரு பிரம்மாண்டமான 'எலிவேஷன்' காட்சி, படத்திற்கு முழு வேகத்தைக் கொடுக்கிறது.
நெல்சனின் பலமான நகைச்சுவை அம்சம் இப்படத்திலும் சிறப்பாகச் செயல்படுகிறது. நமோநாராயணன் மற்றும் யோகிபாபு கூட்டணியின் நகைச்சுவை காட்சிகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன. முதல் பாதியிலேயே மூன்று பிரம்மாண்டமான 'மாஸ்' காட்சிகள் மற்றும் அதிரடியான இடைவேளைக் காட்சி என படம் அதிரடியாக நகர்கிறது.
இரண்டாம் பாதி ரஜினிகாந்த் படங்களுக்கே உரித்தான பாணியில் பயணிக்கிறது. ஒரு மோதல், அதன் தொடர்ச்சியாக நாயகனின் கம்பேக், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் அதிரடியான 'மாஸ்' காட்சிகள் என படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. இவை ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் சிலிர்ப்பையும் தருகின்றன.
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தையும் பரபரப்பு, விறுவிறுப்பு குறையாமல் காட்சிப்படுத்தி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன்.
பரபரப்பான அதிரடி ஆக்சன் காட்சிகள் படத்துக்கு பலம். சில காட்சிகளில் இன்னும் சுவாரசியம் இருந்திருக்கலாம்.
இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் உறுதி.
அனிருத்தின் இசை ஆட்டம் போட வைக்கிறது.
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.