சிறப்புச் செய்தி

"நான் ஒரு கஞ்சப்பெண், பணத்தை முதலீடு செய்ய பயமாக இருக்கிறது" - நடிகை நிகிலா விமலின் ஓபன் டாக்!

14 hours ago 17 பார்வைகள்
"நான் ஒரு கஞ்சப்பெண், பணத்தை முதலீடு செய்ய பயமாக இருக்கிறது" - நடிகை நிகிலா விமலின் ஓபன் டாக்!

பொதுவாகத் திரைத்துறையினர் என்றாலே ஆடம்பர வாழ்க்கை, சொகுசு கார்கள், விலையுயர்ந்த ஆடைகள் என்றுதான் பலரும் நினைப்பார்கள்.

ஆனால், அதற்கு முற்றிலும் மாறாகப் பணம் குறித்த தனது எளிய மற்றும் பாதுகாப்பான பார்வையைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நிகிலா விமல்.

சேமிப்பு மற்றும் முதலீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த நிகிலா விமல், "நான் சேமிப்பு போன்ற விஷயங்களில் மிகவும் மோசமானவள். பணத்தை எங்கும் முதலீடு செய்ய மாட்டேன்;

ஆனால் தேவையில்லாமல் செலவழிக்காமல் சேமித்து வைப்பேன். அந்த வகையில் நான் ஒரு கஞ்சன்தான். ஆனால், கையில் இருக்கும் பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது என்று எனக்குத் தெரியாது" எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தான் மற்றும் தன் குடும்பத்தினர் பணம் விஷயத்தில் இன்னும் பழைய பாணியையே பின்பற்றுவதாகக் குறிப்பிட்டார். "உதாரணமாக, என்னிடம் ஐந்து லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

யாராவது வந்து அந்தப் பணத்தை ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்து 10 லட்சமாக மாற்றலாம் என்று சொன்னால், என் அம்மாவுக்குப் பயமாக இருக்கும். எனக்கும் பயமாகத்தான் இருக்கும். பேராசைப்பட்டு இருக்கும் ஐந்து லட்சத்தையும் இழந்துவிடக் கூடாது, அதை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நாங்கள் நினைப்போம்" என்று கூறியுள்ளார்.

பணத்தின் மீதான தனது பேராசையற்ற அணுகுமுறையைப் பகிர்ந்துகொண்ட நிகிலா, "பணத்தைப் பெருக்க வேண்டும் என்ற ஆசையைவிட, கையில் இருக்கும் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கே நான் முக்கியத்துவம் கொடுப்பேன்.

என்னிடம் இருக்கும் 5 லட்சம் ரூபாயை வைத்தே நான் சாகும் வரை வாழ முடியும். அதை 10 லட்சமாகவோ, 20 லட்சமாகவோ மாற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. அப்படிப் பணத்தைப் பெருக்குவதில் எனக்கு ஒருவித பயம் இருக்கிறது" என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

முதலீட்டு ஆலோசனைகள் குறித்துப் பேசுகையில், "நானே சில நேரங்களில் முதலீட்டு ஆலோசனை நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பேசுவேன். முதலீடு செய்யத் தயாராகத்தான் இருக்கிறேன். ஆனால், அவர்களிடம் 'முதலீடு செய்வதில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் ரிஸ்க்குகள் குறித்து என்னிடம் சொல்லாதீர்கள்' என்று கூறிவிடுவேன்.

ஏனென்றால், அதில் இருக்கும் நஷ்டம் அல்லது ஆபத்துகளைக் கேட்டால் எனக்குப் பயமாகிவிடும்" என்று இயல்பாகக் கூறியுள்ளார்.

பணம் சம்பாதிப்பது ஒரு கலை என்றால், அதைச் சரியாக முதலீடு செய்து பெருக்குவது மற்றொரு கலை. ஆனால், முதலீட்டில் இருக்கும் அபாயங்களை நினைத்துப் பயப்படுபவர்களின் எதார்த்தமான மனநிலையை நடிகை நிகிலா விமலின் இந்த நேர்காணல் அப்பட்டமாகப் பிரதிபலிப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்