சிறப்புச் செய்தி

நீலகிரியில் விடிய விடிய மழை: மண்சரிவில் சிக்கிய அரசு பஸ்- பயணிகள் கதி என்ன?

1 hour ago 12 பார்வைகள்
நீலகிரியில் விடிய விடிய மழை:
மண்சரிவில் சிக்கிய அரசு பஸ்- பயணிகள் கதி என்ன?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் விடிய, விடிய மழை கொட்டியது.

இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நந்தகோபால் பாலம் முதல் பர்லியார் வரை 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலையில் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த வழியாக வந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

மேட்டுப்பாளையம்- கோத்தகிரி வழியாக அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஆங்காங்கே காத்து நின்றன.

இதற்கிடையே ஊட்டியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் மண் சரிவில் சிக்கிக் கொண்டது. பர்லியார் மலைப்பாதையின் கீழ் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. திடீரென அந்த பாதையில் மண்சரிவு ஏற்பட்டு அரசு பஸ் மீது விழுந்தது. இதில் பஸ்சின் மேல் பகுதியில் மண்ணும், மரங்களும் விழுந்து பஸ் முற்றிலும் சேதம் அடைந்தது. அந்த பஸ்சில் டிரைவர், கண்டக்டர் மற்றும் 6 பயணிகள் இருந்துள்ளனர்.

பஸ்சை மண் குவியல் விழுந்து அமுக்கியதும் உள்ளே இருந்தவர்கள் அபயக்குரல் எழுப்பி உள்ளனர். அந்த வழியாக வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மண்சரிவில் சிக்கி கிடந்த பஸ்சை மீட்கும் பணி தொடர்ந்து நடந்தது. முதல்கட்டமாக பஸ் கண்டக்டரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். அவர் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

டிரைவர் மற்றும் 6 பயணிகள் கதி என்ன? என்று தெரியவில்லை. கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மீட்பு பணிகளை அவர் முடுக்கிவிட்டார். தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் இணைந்து மீட்பு பணிகளைமேற்கொண்டு வருகிறார்கள்.

பஸ் முழுமையாக மீட்கப்பட்ட பிறகே பயணிகளின் நிலை என்ன என்று தெரியும்? என போலீசார் தெரிவித்தனர்.

சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகே குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

இதேபோல் மலை ரெயில் பாதையிலும் மண் மற்றும் கற்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டதால் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மலைெரயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் 9-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தலைமையில் விடிய, விடிய ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன் சீரமைக்கப்பட்டது. தற்போது இந்த வழியாக மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் குன்னூர் அருகே உள்ள அலக்கரை மற்றும்சப்ளை டிப்போ உள்ளிட்ட பகுதிகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் செயல்படும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பர்லியார் 25 செ.மீ. மழை பெய்துள்ளது. கீழ் கோத்தகிரியில் 20 செ.மீ., எடப்பள்ளியில் 16 செ.மீ. கோத்தகிரியில் 13 செ.மீ., கெத்தை, தேவாலா, கொடநாடு பகுதியில் 8 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது. இதேபோல கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 14 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்