சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட் உரிமையாளரும் தொழில் அதிபருமான வீரமணிக்கு எதிராக இதுவரை 7 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெம் வீரமணி மீதான வழக்கில் சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண் தலையீட்டின் காரணமாக, வீரமணி மற்றும் சாந்தியின் பெயர் புகாரில் குறிப்பிட்டிருந்தும் காவல் துறையினர் சரிவர விசாரிக்கவில்லை. எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, தாம்பரத்தை சேர்ந்த வாராகி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், வழக்கை மூட 40 கோடி ரூபாய் வரை பணம் கை மாறியுள்ளதால், வழக்கை மூடியது குறித்தும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கு தொடர்பான ஆதாரங்களை சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜராகி வழங்கும்படி, வாராகிக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வழக்கை மூட ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வழக்கை லஞ்ச பணத்தில் 24 கோடி ரூபாய் தங்க நகை வாங்கியுள்ளதாகவும். எனவே அது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
காவல்துறை தரப்பில், வழக்கு தொடர்பான இரண்டாவது நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும்,வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் (குற்ற எண் 174/2025) விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
அதேபோல், வீரமணியை முந்தைய திமுக அரசு பாதுகாத்ததாக முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களைப் பெற அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தக் கோரி திமுக சார்பில் டி.ஆர்.பாலு தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கில் மூத்த வக்கீல் ஆஜராக இருப்பதால், அவகாசம் வழங்க வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு (திமுக) கோரிக்கையை ஏற்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரணையை நவம்பர் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.