சிறப்புச் செய்தி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கு - காவலருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

1 hour ago 9 பார்வைகள்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கு - காவலருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக அச்சுறுத்தி, தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் முகமது புஹாரிக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடுத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில் என்பவரிடம் ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக, பரங்கிமலை காவல் ஆய்வாளர் முகமது புஹாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை யானைக்கவுனி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில்,ஏற்கெனவே ஜாமின் கோரி முகமது புஹாரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில், ஜாமின் கோரி இரண்டாவது முறையாக முகமது புஹாரி தாக்கல் செய்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சூழல் மாறியுள்ளதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென வாதிட்டார்.

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அவை இன்னும் கோப்புக்கு எடுக்கப்படவில்லை. மனுதாரர் காவல் ஆய்வாளராக உள்ளதால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, சாட்சிகளை கலைக்கக்கூடாது. தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்