சிறப்புச் செய்தி

"பொய் குற்றச்சாட்டில் சட்டவிரோதமாக கைது.." பேராசிரியர் கலையரசன் டிஜிபிக்கு கடிதம்

1 hour ago 6 பார்வைகள்
"பொய் குற்றச்சாட்டில் சட்டவிரோதமாக கைது.." பேராசிரியர் கலையரசன் டிஜிபிக்கு கடிதம்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் கலையரசன் The Dravidian Model என்ற புத்தகத்தை எழுதியவர் ஆவார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை சீருடையற்ற காவலர்களால் தான் கைது செய்யப்பட்டதாக அவர் டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நேற்று அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, சீருடை அணியாத சில காவலர்கள் கதவைத் தட்டி தன் பெயரை கேட்டதாகவும் பல்லாவரம் தவெக எம்எல்ஏ காமாட்சியைப் பற்றி அவதூறாகப் பதிவிட்டதற்காக தன்னை கைது செய்வதாக கூறி வாடகைக் காரில் அழைத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்வதற்கான எப்ஐஆரை காட்டாமலும் குடும்பத்தினருக்கு கூட தகவல் தெரிவிக்க அனுமதிக்காமலும் தன்னை கைது செய்து சென்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதுமற்றுமின்றி அழைத்துச் சென்ற சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு, தன்னை வீட்டில் இறக்கிவிடுமாறு உத்தரவு வந்துள்ளதாக காவலர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தனது புகைப்படத்துடன் கூடிய போலிக் கணக்கிலிருந்து அவதூறுப் பதிவு வெளியிடப்பட்டிருப்பதை காவலர்கள் காட்டியதாகவும், அந்தக் கணக்கு விஜயமணி என்பவரின் பெயரில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்பின் காலை 7.45 மணியளவில் தன்னை வீட்டில் இறக்கிவிட்ட காவலர்கள், அந்த பதிவுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக் கடிதம் பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.

குற்றவாளியைப் போல நடத்தப்பட்டது தனக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியதாகவும், இந்தச் சம்பவம் வெறும் போலிக் கணக்குப் பதிவுடன் மட்டும் தொடர்புடையதாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள கலையரசன், இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது குரலை ஒடுக்கவே இத்தகைய சட்டவிரோத செயல் அரங்கேற்றப்பட்டதாக கலையரசன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்