சிறப்புச் செய்தி

ஞானேஷ் குமார் சிறைக்கு செல்வார்.. மோடியும் அமித் ஷாவும் தப்ப முடியாது - பேரணியில் ராகுல் காந்தி பேச்சு

44 minutes ago 8 பார்வைகள்
ஞானேஷ் குமார் சிறைக்கு செல்வார்.. மோடியும் அமித் ஷாவும் தப்ப முடியாது -  பேரணியில் ராகுல் காந்தி பேச்சு

தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணியின் மாபெரும் பேரணி தொடங்கியுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்ஐஆருக்கு எதிராக ஒருங்கிணைக்கப்ட்டுள்ள இந்த பேரணி உற்று நோக்கப்பட்டு வருகிறது.

டெல்லி ராம்லீலா மைதானத்தை நோக்கி ராகுல் தலைமையில் தலைவர்கள் பேரணியாக சென்றனர். மைதானத்தில் ராகுல் மற்றும் அவரை தொடர்ந்து பிற தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.

மல்லிகார்ஜுன் கார்கே, பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, அகிலேஷ் யாதவ் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்வில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,

"2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் 15 சதவீத வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அப்படியெனில் 2024 மக்களவைத் தேர்தல் சட்டவிரோதமான தேர்தல். அது திருடப்பட்ட தேர்தல்.

இந்த நாட்டில் பல ஆண்டுகளாக வாக்குத் திருட்டு நடந்து வருகிறது. மத்தியப் பிரதேசம், அரியானா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாகவும், வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கியும், புதிதாகச் சேர்த்தும் வாக்குத் திருட்டு நடந்துள்ளது.

வாக்குத் திருட்டுக்கு உடந்தையாக இருந்ததற்காக ஞானேஷ் குமார் சட்டத்தின் முன் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

ஞானேஷ் குமார் இல்லாமல் நரேந்திர மோடி பிரதமராகியிருக்க முடியாது. அமித் ஷா உள்துறை அமைச்சராகியிருக்க முடியாது. இது சாதாரண திருட்டு அல்ல. இது தேசத்துரோகம்.

விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்களின் உரிமைகள் கிடைக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.

நாட்டின் ஒட்டுமொத்த செல்வமும் 2 அல்லது 3 பேரின் கைகளுக்குச் சென்றுவிட்டது. 2 அல்லது 3 பேருக்கு மட்டுமே சொந்தமான நாடாக இந்தியா இருக்கக் கூடாது.

இந்த நாட்டை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கை ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து அகற்றுவதுதான்.

ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். ஞானேஷ் குமார் சிறைக்குச் செல்வார்.

பாவம் ஞானேஷ் குமாரால் இரவில் தூங்க முடியவில்லை. ஞானேஷ் குமார் பயத்தால் இரவில் தூங்க முடியாமல் இருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

ஆனால் அவர் மிகப்பெரிய குற்றத்தைச் செய்துள்ளார். அவர் நாட்டின் குரலையும் ஆன்மாவையும் அடக்க முயன்றுள்ளார். நரேந்திர மோடியாலும் அமித் ஷாவாலும் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.

நரேந்திர மோடி எங்கும் போக மாட்டார் என்று அமித் ஷா கூறுகிறார். நானும் அதைத்தான் சொல்கிறேன். நரேந்திர மோடியை எங்கும் தப்பிச் செல்ல விடமாட்டோம்.

ஞானேஷ் குமாருக்குப் பிறகு நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம். வாக்குத் திருட்டுக்கு மக்கள் நீதி கேட்பார்கள். அதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இந்தப் போராட்டம் எந்த ஒரு கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ உரியது அல்ல. இது அனைவரும் ஒன்றிணைந்து செய்யும் போராட்டம். இது இந்தியாவின் போராட்டம், இது இந்தியாவின் குரல்.

நாம் வெறுப்போ பகைமையோ கொண்டவர்கள் அல்ல. நாம் அன்பு கொண்டவர்கள். நாங்கள் வெறுப்பின் கடையை திரிபவர்கள் அல்ல. அன்பின் கடையை திறப்பவர்கள்.

இந்த நாட்டில் வரிசையில் கடைசியாக நிற்கும் மனிதரின் குரலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அவர் இந்துவாக, முஸ்லிமாக , சீக்கியராக , பழங்குடியினராக , தலித்தாக, பெண்ணாக, மாற்றுத்திறனாளியாக, யாராக இருந்தாலும் அவர்களுடைய குரலைப் பாதுகாக்க வேண்டும். அதுதான் எங்களுடைய போராட்டம்.

இந்த நாட்டில் அன்பையும் சகோதரத்துவத்தையும் மீண்டும் கொண்டுவர விரும்புகிறோம். அன்பின் கடையை மீண்டும் திறக்க விரும்புகிறோம்" என்றார்

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்