சிறப்புச் செய்தி

இரவு 10 - காலை 6 மட்டுமே படுக்கை அனுமதி- விதியை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு

6 hours ago 16 பார்வைகள்
இரவு 10 - காலை 6 மட்டுமே படுக்கை அனுமதி- விதியை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு

ரெயில் பயணங்களின் போது படுக்கை வசதியைப் பயன்படுத்துவது தொடர்பான நேரக் கட்டுப்பாட்டு விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே படுக்கையில் உறங்க அனுமதிக்கப்படும் என்ற தற்போதைய விதியை ரத்து செய்ய முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த விதியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு தற்போது அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தனது உடல்நலம் சரியில்லாத மனைவியுடன் ரெயிலில் பயணம் செய்த போது, குறிப்பிட்ட நேரத்திற்கு வெளியே படுக்கை வசதியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்க வேண்டும் என்ற 2017ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வு, ரெயில்களில் படுக்கை வசதிகளைப் பயன்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என்பது தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெளிவுபடுத்தியது. பகல் நேரங்களில் கீழ் படுக்கைகள் அனைத்து பயணிகளும் அமர்வதற்கான பொதுவான இருக்கைகளாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும், நடுப்படுக்கையில் பயணிப்பவர்கள் இரவு 10 மணிக்கு மேல் மட்டுமே படுக்கையை உயர்த்திப் படுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நேரக் கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருந்தாலும் கூட, கர்ப்பிணிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபர்கள் எந்த நேரத்திலும் தங்களின் படுக்கை வசதியைப் பயன்படுத்திக் கொள்ள ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தங்களது உத்தரவில் சுட்டிக்காட்டினர். மனுதாரர் தனது பயணத்தின் போது இத்தகைய சிரமங்களைச் சந்தித்திருந்தால், உடனடியாக ரெயில்வே பாதுகாப்புப் படையினரையோ அல்லது பணியில் இருந்த ரெயில்வே ஊழியர்களின் உதவியையோ நாடியிருக்க வேண்டும். ஆனால், அதைக் செய்யாமல் நேரடியாக விதியை எதிர்த்து மனுத் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். மேலும் மனுதாரர் இதுதொடர்பாக முறையான நிவாரணம் பெற ரெயில்வே நிர்வாகத்தை அணுகலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்