சிறப்புச் செய்தி

முதலமைச்சர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

20 hours ago 22 பார்வைகள்
முதலமைச்சர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

பெரம்பூர் தொகுதியில், 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முதலமைச்சர் விஜய் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.

முதலமைச்சர் விஜய் தரப்பில், வேட்புமனுவில் அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளதாகவும், எந்த தகவலையும் மறைக்கவில்லை என வாதிடப்பட்டது. வேட்புமனுவில் தகவல்களை மறைப்பது வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, குற்ற வழக்கு சம்பந்தப்பட்டது. விஜய் வசதிபடைத்தவர் என எல்லா வாக்காளருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது, சொத்தை மறைத்ததாகக் கூறி, அது வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எப்படி கூற முடியும் என வாதிடப்பட்டது.

தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்த வாக்காளர் தினேஷ் தரப்பில், முதலமைச்சர் விஜய் தனது வேட்புமனுவில், பண்ருட்டியில் வாங்கியிருந்த 30 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை என வாதிடப்பட்டது. வேட்புமனுக்களில் குற்ற வழக்குகளை மறைப்பது எப்படி விதிமீறலோ, அதேபோல சொத்து விவரங்களை மறைப்பதும் விதிமீறல் மட்டுமல்ல ஊழல் நடவடிக்கை. விவரங்கள் மறைத்தது குறித்து தேர்தல் அதிகாரி முழுமையான விசாரணை நடத்தமுடியாது. தேர்தல் வழக்கில் தான் இதுகுறித்து விரிவாக விசாரிக்க முடியும் என்பதால், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கூடாது என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, முதலமைச்சர் விஜய் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மனு தீர்ப்புக்காக இன்று பட்டியலிடப்பட்டது.

அதனை தொடர்ந்து அந்த மனு மீதான தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில், சொத்து விவரங்களை மறைத்து விஜய் தேர்தலில் போட்டியிட்டுள்ளதால் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் என கூறிய நீதிபதி, தினேஷ் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க கோரி முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்