விரைவில் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவிப்பேன் - டிரம்ப்

ஈரானை தோற்கடித்த பிறகு, ஹார்முஸ் நீரிணை நீர்வழியை விரைவில் அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிப்பேன் என்று அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்தார்.

"மிக மோசமாக தோற்கடிக்கப்பட்டு வரும் ஈரானை நாம் தோற்கடித்து முடித்த பிறகு, வெகுவிரைவில் நான் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிப்பேன்," என்று நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஒரு காவல்துறை பயிற்சி பள்ளியில் நடந்த அரசியல் பேரணியின் போது அவர் சிரித்துக்கொண்டே கூறினார்.

அதிபர் டிரம்ப், இஸ்ரேலுடன் இணைந்து, ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது மற்றும் மக்கள் எழுச்சியை தூண்டுவது ஆகிய அறிவிக்கப்பட்ட நோக்கங்களுடன், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று அந்நாட்டிற்கு எதிராக போரைத் தொடங்கினார்.

இருப்பினும், உலகளாவிய எரிசக்தி மற்றும் பிற சரக்கு கப்பல் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையின் பெரும்பகுதியின் மீது தன் கட்டுப்பாட்டை நிறுவி ஈரான் பதிலடி கொடுத்தது.

ஹார்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு முட்டுக்கட்டை நிலை நீடிக்கிறது. ஈரான் பெரும்பாலான பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கு அனுமதி மறுப்பதுடன், அதன் பொருளாதாரத்தை முடக்கும் முயற்சியில் அமெரிக்க கடற்படை ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளது.

"நாங்கள் முற்றுகையிட்டுள்ளோம். நாங்கள் விரும்பினால் தவிர, எந்த கப்பல்களும் உள்ளே வர முடியாது," என்று ஆரவாரம் செய்த ஆதரவாளர்கள் மற்றும் காவல் துறையினரிடம் டிரம்ப் கூறினார்.

முன்னதாக அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும் பிறப்புரிமை குடியுரிமை சட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்து உத்தரவிட்டார்.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் டிரம்பின் நிர்வாக உத்தரவை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூன் 30-ஆம் தேதி ரத்து செய்தது.

இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த டிரம்ப் 2 புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இதில் அமெரிக்காவிற்கு வந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நோக்கத்துடன் விசா கோருபவர்களை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel