சிறப்புச் செய்தி

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் - மதுரை கலெக்டர் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்

12 minutes ago 4 பார்வைகள்
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் - மதுரை கலெக்டர் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலானது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடாகும்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.

தர்காவும், தீபத்தூணும் குறைந்த இடைவெளியில் உள்ளதாக கூறியும், தீபத்தூணில் தீபம் ஏற்றினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும் தெரிவித்து ஐகோர்ட் உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.

மதுரை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த ஆண்டு மட்டும் கார்த்திகை தீப தினத்தன்று (நேற்று) தீபம் ஏற்றிக்கொள்ள அனுமதித்தது. தீபம் ஏற்றும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு விசாரணைக்கு வரவில்லை.

இதற்கிடையே, நேற்று மாலை 6 மணி அளவில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தாமல் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் நேற்று தீபம் ஏற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆகம விதிப்படியே தீபம் ஏற்றப்பட்டதாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல் தூணில் தீபம் ஏற்றாததற்கான காரணங்களை தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு முன்பு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தாக்கல் செய்தார்.

அதில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை பின்பற்ற முடியவில்லை. சில தவிர்க்க முடியாத காரணங்களால் தீப தூணில் விளக்கை ஏற்ற முடியவில்லை என மதுரை மாவட்ட கலெக்டர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை தூணில் திட்டமிட்டே தமிழக அரசு தீபம் ஏற்றவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்தாத கலெக்டர், அறநிலையத்துறை ஆணையருக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை கோரி இந்து தர்ம பரிஷத் அமைப்பினர் முறையீடு செய்தனர்.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவு கடைபிடிக்காதது தொடர்பாக அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்தால் விசாரிப்போம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்