சிறப்புச் செய்தி

திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் மீது வழக்குப்பதிவு

9 minutes ago 2 பார்வைகள்
திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் மீது வழக்குப்பதிவு

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகைத் தீப திருநாள் அன்று, இந்த ஆண்டில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நிறைவேற்றப்படுமா? என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் மதுரை மாவட்டத்துக்கு 144 தடை அதிரடியாக பிறப்பிக்கப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் சுமார் 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து திருப்பரங்குன்றத்துக்குப் புறப்பட்ட பா.ஜ.க.வினர், இந்து அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவி வந்தது.

பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட முயன்ற பல முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

நேற்று மாலை 6 மணி அளவில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

இதனால் திருப்பரங்குன்றத்தில் திரண்டு இருந்த இந்து அமைப்பினர், பா.ஜ.க.வினர், முருக பக்தர்கள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதித்து மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன், மாரி சக்கரவர்த்தி, சூர்யா உள்ளிட்ட பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினர் 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தாமல் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் நேற்று தீபம் ஏற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆகம விதிப்படியே தீபம் ஏற்றப்பட்டதாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்