நயினார் நாகேந்திரன் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்! - அமைச்சர் வன்னிஅரசு
முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து நயினார் நாகேந்திரனின் அநாகரிக பேச்சிற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது டிஜிபி அலுவலகத்தில் வழக்கறிஞர் வர்த்தினி ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பம் குறித்து நயினார் நாகேந்திரனின் அநாகரிக பேச்சிற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குறித்து இந்திய தலைமை அமைச்சர் மோடி பேசாத அவதூறா?
காஷ்மீரில் 8 வயது ஆசிபாவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்து, வரவேற்பு அளித்தவர்கள் தான் பாஜகவினர்.
பெண்களுக்கு எதிரான வெறுப்பும், அவதூறும் தான் அவர்கள் பேசும் அரசியலின் அடிப்படை. இதற்கு முன்னரும் நடிகை ஒருவர் குறித்தும் நயினார் அவர்களின் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது.
நயினார் நாகேந்திரன் அவர்கள் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel