பழனி கோவிலில் நடிகர் தனுஷ் குடும்பத்துடன் சாமி தரிசனம்
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முக்கிய விழா மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதேபோல் அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் அவ்வப்போது பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் இன்று அதிகாலை தனது மகன்கள் மற்றும் அப்பா, அம்மா, அக்கா உள்ளிட்ட குடும்பத்தினருடன் பழனிக்கு வருகை தந்தார். அதிகாலை 6 மணியளவில் மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை வழியாக குடும்பத்தினருடன் மலைக்கு சென்றார்.
தொடர்ந்து மலைக்கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு, பழனி முருகப்பெருமானை தரிசனம் செய்தார். சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து சிறிது நேரம் கோவிலில் இருந்த தனுஷ், பின்னர் ரோப் கார் மூலம் மலைக்கோவிலில் இருந்து அடிவாரத்திற்கு வந்தார்.
நடிகர் தனுஷ் வருகையையொட்டி பழனி மலைக்கோவில் மற்றும் அடிவார பகுதியில் பக்தர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டது. மலைக்கோவில் பகுதியில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாத நிலையில், அடிவாரத்திற்கு வந்த தனுஷை பார்த்த ஏராளமான பக்தர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டனர். சாமி தரிசனம் முடித்த பின்னர் நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டு சென்றார்.
விரைவில் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள ஓம் திரைப்படம் வெளிவர உள்ளது. மேலும் நேற்று புதிய படத்திற்காக திருப்பாச்சேத்தியில் தனது குடும்பத்தினர் மற்றும் படக்குழுவினருடன் நடிகர் தனுஷ் காணிக்கை செலுத்தி வழிபட்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்று பழனி கோவிலில் வழிபாடு நடத்தியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel