தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையை குறிவைத்து கடந்த வியாழன் அதிகாலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவு குறிவைக்கப்பட்டது எனவும் உயிரிழந்த 6 பேரில் நோயாளிகள் மற்றும் ஒரு மருத்துவரும் அடங்குவார் என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
ஆனால் ஹமாஸ் அமைப்பின் கான் யூனிஸ் பகுதிக்கான தளபதி முகமது அபு இஸ்மாயிலை இலக்காக கொண்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்களை வழங்கவில்லை.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், எகிப்து, துருக்கி மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 18 அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இதுதொடர்பாக கூட்டாக அவை வெளியிட்ட கண்டன அறிக்கையில், இது சர்வதேச மனிதாபிமான சட்ட விதிமீறல் எனவும், காசாவுக்குள் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் உதவிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கும்படியும் வலியுறுத்தி உள்ளன.
போரினால் சுகாதார உள்கட்டமைப்பு முற்றிலுமாக சிதைக்கப்பட்ட காசாவில், தற்போது செயல்படும் சில மருத்துவ வசதிகளில் ஒன்றாக கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனை விளங்குகிறது.
ஹமாஸும் அதன் கூட்டாளிகளும் ராணுவ நடவடிக்கைகளை மறைப்பதற்காக மருத்துவமனைகளை பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதல்களில் அப்பாவி மக்களே அதிகம் உயிரிழந்து வருகின்றனர்.
இஸ்ரேலியப் படைகள் இதற்கு முன்னர் 2025ல் நாசர் மருத்துவமனை வளாகத்தில் உள்ளூர் செய்தியாளர்கள் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்தியது. இதில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.