காதலிக்க வைக்க களமிறங்கிய சிங்கப்பூர் அரசு - 'பர்ஸ்ட் டேட்' ஆப் அறிமுகம்!
மக்கள்தொகையை நிலையாக வைத்திருக்கத் தேவையான பிறப்பு விகித மாற்று நிலை 2.1 ஆக இருக்க வேண்டும். ஆனால், சிங்கப்பூரில் இந்த விகிதம் 0.87 என்ற மிக மோசமான நிலைக்கு வீழ்ந்துள்ளதால், 'பர்ஸ்ட் டேட்' என்ற இந்த அதிரடி விஞ்ஞானப்பூர்வ முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
இந்தச் செயலியில் பொதுமக்கள் தங்களின் அதிகாரப்பூர்வ அரசு அடையாளப் பதிவான 'சிங்பாஸ்' மூலம் மட்டுமே பதிவு செய்ய முடியும். இதனால் போலி கணக்குகள் உருவாக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது.
மற்ற வணிக ரீதியிலான டேட்டிங் செயலிகள் போலப் பல நூறு நபர்களைக் காட்டாமல், நோபல் பரிசு பெற்ற கணித சூத்திரத்தின் அடிப்படையில், ஒரு நபருக்குப் பொருத்தமான தகுதியுடைய ஒரே ஒரு இணையை மட்டுமே இந்தச் செயலி துல்லியமாகப் பரிந்துரைக்கும்.
தற்போது முதற்கட்டமாக 21 முதல் 35 வயதுடைய அரசு ஊழியர்களுக்கு மட்டும் சோதனை முறையில் இந்தச் செயலி பயன்பாட்டிற்குத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நாடுகள் பொருளாதார ரீதியாகப் பணக்கார நாடுகளாவதற்கு முன்பே, உழைக்கும் இளைஞர்கள் குறைந்து "முதியோர்கள் அதிகம் வாழும் நாடாக" மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சீனா, ரஷ்யா, தென்கொரியா போன்ற நாடுகள் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு நேரடியாகப் பண உதவி வழங்கி வருகின்றன.
இந்தியாவின் ஒட்டுமொத்த பிறப்பு விகிதமும் குறைந்து வரும் நிலையில், குறிப்பாகத் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இந்த விகிதம் 1.4 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது (அதாவது 100 பெண்களுக்குச் சராசரியாக 140 குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றனர்). இதனைச் சரி செய்யத் தென்மாநில அரசுகள் சலுகைகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன.
ஆந்திராவில் தம்பதியினர் 3-வது குழந்தை பெற்றால் ரூ.30 ஆயிரமும், 4-வது குழந்தை பெற்றால் ரூ.40 ஆயிரமும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, 3-வது குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு 1 ஆண்டு (12 மாதங்கள்) ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை அளித்துச் சட்டம் இயற்றியுள்ளது.
மக்கள்தொகைச் சரிவைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் வேளையில், சிங்கப்பூர் அரசின் இந்த 'விஞ்ஞானப்பூர்வ டேட்டிங் செயலி' முயற்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel