சிறப்புச் செய்தி

தேர்தல் அறிக்கையில் கோட்டை கட்டி அரசாணையில் குழிபறிக்கிறது தவெக - நயினார் நாகேந்திரன்

4 hours ago 25 பார்வைகள்
தேர்தல் அறிக்கையில் கோட்டை கட்டி அரசாணையில் குழிபறிக்கிறது தவெக -  நயினார் நாகேந்திரன்

வாக்குறுதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; தவறினால், மக்கள் மன்றத்தில் தவெகவிற்குச் சம்மட்டி அடி நிச்சயம் தேர்தல் அறிக்கையில் கோட்டை கட்டி, அரசாணையில் குழிபறித்து வருகிறது என தவெக அரசிற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

தேர்தல் களத்தில் ஓட்டுக்காக ஒரு வேஷம், அதிகார நாற்காலியில் அமர்ந்த பின் மக்களை வஞ்சிக்க இன்னொரு வேஷம் எனத் தமிழ்நாட்டு மக்களைப் பகிரங்கமாக ஏமாற்றி வருகிறார் முதல்வர்.

என்பதற்கு அண்ணனின்சீர் திட்டமே அப்பட்டமான சான்று. குடும்ப ஆண்டு வருமானம் ₹5 லட்சத்திற்குள் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் 8 கிராம் தங்கமும் பட்டுச் சேலையும் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் ஆசை காட்டிவிட்டு, தற்போது அரசாணையில் அந்த உச்சவரம்பை ₹2.50 லட்சமாகப் பாதியாகக் குறைத்து நடுத்தரக் குடும்பத்துப் பெண்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறது தவெக அரசு

‘சூப்பர் சிக்ஸ்’ எனப் பெயரளவில் கவர்ச்சி காட்டிவிட்டு, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் என்ற வாக்குறுதியைச் சட்டசபையிலேயே வெறும் 3 சிலிண்டர்களாகக் குறைத்து, அதற்கும் ₹2.50 லட்சம் வருமான வரம்பு போட்டு தாய்மார்களை ஏமாற்றியது இதே அரசுதான்.

அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் என மேடைகளில் முழங்கிவிட்டு, இப்போது 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் கிடையாது என நிபந்தனை வேலி போட்டு நடுத்தரக் குடும்பங்களின் தலையில் கூடுதல் மின்கட்டணச் சுமையை ஏற்றியிருக்கிறது!

முழு விவசாயக் கடன் தள்ளுபடி என ஆசை காட்டிவிட்டு, நூறு கட்டுப்பாடுகளைப் போட்டு 80% உழவர்களை நட்டாற்றில் விட்ட அதே வஞ்சகக் கத்தரிக்கோலைத்தான் சிலிண்டர், மின்சாரம் மற்றும் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்திலும் இந்த அரசு துணிச்சலாகப் பிரயோகித்திருக்கிறது.

ரீல் உலக வித்தைகளை வைத்து ரியல் அரசியலில் மக்களை ஏமாற்றிவிடலாம் என முதல்வர் தப்புக் கணக்குப் போட வேண்டாம். பெண்களின் சீர், குடும்பங்களுக்கான சிலிண்டர், இலவச மின்சாரம் மற்றும் உழவர்களின் வயிற்றில் அடிக்கும் ‘அரசாணை கத்தரிக்கோல்’ மோசடிகளை உடனே நிறுத்தி, வாக்குறுதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; தவறினால், மக்கள் மன்றத்தில் தவெகவிற்குச் சம்மட்டி அடி நிச்சயம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்