சிறப்புச் செய்தி

விளையாட்டுத்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருபவர் முதலமைச்சர் விஜய்- ஆதவ் அர்ஜுனா புகழாரம்

8 hours ago 18 பார்வைகள்
விளையாட்டுத்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருபவர் முதலமைச்சர் விஜய்- ஆதவ் அர்ஜுனா புகழாரம்

20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 46வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெற்றி பெற்றுப் பதக்கங்களைக் குவித்த வீரர், வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் மிகவும் கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிகழ்வில் மாற்று மாநிலத்தவருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளும், 'டிரீம் ஒலிம்பிக்-2036' (DREAM OLYMPIC-2036) என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்ட சிறப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விளையாட்டு வீரர்களின் தேவைகளை உடனுக்குடன் கண்டறிந்து பூர்த்தி செய்வதில் முதலமைச்சர் விஜய் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருவதாகப் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சர்வதேச அளவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிகளவில் தகுதி பெறுவதற்குக் போதுமான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் இதுவரை இல்லாத நிலையைச் சுட்டிக்காட்டினார். ஒலிம்பிக் மேடையில் நமது மாநில வீரர்கள் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றால், உலகத் தரத்திலான பயிற்சிச் சூழலையும் மைதானங்களையும் உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும், அத்தகைய கட்டமைப்புகள் அமையும் போது மட்டுமே ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது சாத்தியமாகும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

விளையாட்டுத் துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றும் நோக்கில் பல புதிய கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன்வைப்பதாகக் குறிப்பிட்ட அவர்:

* பள்ளி மாணவர்களின் உடல்திறனை மேம்படுத்த வாரத்தின் 5 நாட்களும் தவறாமல் விளையாட்டு வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சிறுவயதிலேயே திறமைகளைக் கண்டறியும் வகையில் 8 வயதிலிருந்தே விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

* உயர்கல்வி நிறுவனங்களான கல்லூரிகளிலும் உடற்கல்வி வகுப்புகளைக் கட்டாயப் பாடமாகச் சேர்க்க வேண்டும். என்று வலியுறுத்தினார்.

மாநிலத்தில் தற்போதைய மைதானங்களின் நிலை குறித்துப் பேசிய அமைச்சர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானங்களே இன்றளவும் பயன்பாட்டில் பிரதானமாக இருந்து வருகின்றன என்று குறிப்பிட்டார். 30 ஆண்டுகள் விளையாட்டுத்துறையில் வளர்ச்சி இல்லை. ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கான பயிற்சி வசதி தமிழ்நாட்டில் இல்லை; குஜராத், பஞ்சாப் எல்லாம் விளையாட்டில் அப்டேட் ஆகிவிட்டார்கள்.

1994க்கு பிறகு தமிழ்நாட்டில் எந்த விதமான மைதானமும் உருவாகவில்லை, பிற மாநிலங்களில் சர்வதேச தரத்திற்கு இணையான புதிய மைதானங்கள் உருவாக்கப்பட்டு வரும் வேளையில், தமிழகத்திலும் 46 வகையான சர்வதேச விளையாட்டுக்கள் இடம்பெறும் வகையில் ஒலிம்பிக் தரத்திலான நவீன மைதானங்களையும் உள்கட்டமைப்புகளையும் அமைக்கத் திட்டமிடப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதியளித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த திறமைமிக்க வீரர்களை உலகளவில் மிளிரச் செய்ய 'டிரீம் ஒலிம்பிக்-2036' திட்டத்தின்கீழ் விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வரும் காலங்களில் ஆசிய விளையாட்டு மற்றும் செஸ் ஒலிம்பியாட் மட்டுமன்றி, ஒலிம்பிக் போட்டிகளிலும் தமிழ்நாட்டின் கொடி உயரப்பறக்கும்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்